டிரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா முதலில் பேட் செய்து வங்கதேச அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.
துவக்கத்தில் கம்பீரும், ரோஹித்தும் சிறப்பாக விளையாடி 7 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்தனர் ரோஹித் ஷர்மா 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ரெய்னா, யுவ்ராஜ், யூசுஃப் என்று அதிரடி வீரர்கள் இருக்கையில் தோனி களமிறங்கி மிகப்பெரிய தவறு செய்தார்.
அவரும் கம்பீரும், ஏதோ ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது போல் சொத்தை ஸ்பின் பந்து வீச்சில் சிங்கிள்களாக எடுத்தனர். தோனி முதலில் வீராவேசமாக ஒரு சிக்சர் அடித்தார் அதன் பிறகு அவரால் ஒன்றும் அடிக்க முடியவில்லை.
கம்பீரும் சிங்கிளாக எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் கம்பீர் தன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இருவரும் இணைந்து 7 ஓவர்களில் வெறும் 53 ரன்களையே சேர்க்க முடிந்தது.
அப்போது 21 பந்துகளில் ஒரு சிக்சர் மட்டுமே அடித்த தோனி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஆபத்பாந்தவராக களமிறங்கிய யுவ்ராஜ் சிங் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளுடன் 18 பந்துகளில் 41 ரன்களை விளாசி அணியை உயர்த்தினார்.
ரெய்னா 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரின் கடைசியில் இறங்கிய இர்ஃபான் பத்தான் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியை அடித்து 180 ரன்கள் எட்ட உதவினார்.
யூசுஃப் பத்தான் 1 பந்தை மட்டுமே சந்திக்க முடிந்தது.
வங்கதேச அணியில் ஷாகிப் அல் ஹஸன் சிக்கனமாக வீசி 24 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். மகமுதுல்லாவும் சிக்கனமாக வீசினார். இவர்கள் இருவர் பந்து வீச்சையும்தான் தோனியும், கம்பீரும் வேஸ்ட் செய்தனர்.