கெய்ல் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

சனி, 6 ஜூன் 2009 (22:17 IST)
லண்டன், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐ.சி.சி. உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் 'சி' பிரிவு முதல் போட்டியில் கிறிஸ் கெய்ல் புரட்டி எடுத்த 83 ரன்கலாலும் பிலேட்சர் எடுத்த அதிரடி 53 ரன்களாலும் மேற்கிந்திய அணி ஆஸ்ட்ரேலிய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆஸ்ட்ரேலியா எடுத்த 169 ரன்கள் இலக்கை மேற்கிந்திய அணி துரத்தி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை ஈட்டியது.

துவக்கம் முதலே அதிரடி மட்டை சுழற்றல் நடந்தேறியது. பிரட் லீயும், மிட்செல் ஜான்சனும் துவங்கினர்.

பிரட் லீயின் 3-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் சிலம்பாட்டம் ஆடி துவம்சம் செய்தார். பிரட் லீயின் முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் மைதானத்திற்கு வெளியே ரோடிற்கு அடித்த கெய்ல், அதன் பிறகு இரண்டாவது சிக்சரை நேராகவும் 3-வது சிக்சரை மீண்டும் மிட் விக்கெட் திசையில் டோடிற்கும் அடித்தார்.

23 பந்துகளில் அரைசதம் எடுத்த கிறிஸ் கெய்ல் அதன் பிறகு நிதானப் போக்கை கடைபிடித்து வெற்றியை உறுதி செய்தார்.

மறு முனையில் பிளெட்சர் அதிரடியாக துவங்கி அதன் பிறகு கேப்டனுக்கு உறுதுணையாக விளையாடி 32 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் சகிதம் 53 ரன்கள் எடுத்தார்.

கிறிஸ் கெய்ல் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் சகிதம் 88 ரன்கள் எடுத்து கடைசியாக ஒரு வழியாக பிரட் லீயிடமே ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்லும், பிளெட்சரும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக சேர்த்த 133 ரன்கள் எந்த விக்கெட்டுக்கு இடையிலும் நிகழ்ந்த 3-வது மிகப்பெரிய இணைந்து எடுத்த ரன்களாகும்.

பிரட் லீ 4 ஓவர்களில் 56 ரன்கள் கொடுத்தார். ஜான்சன் 36 ரன்களைக் கொடுத்தார். பாண்டிங் 7 வீச்சாளர்களை பயன் படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை.

கிறிஸ் கெய்ல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்