காமன் வெல்த் கிராமம் தூய்மைப் பற்றி வெட்கப்படத் தேவையில்லை: லலித் பானட்

செவ்வாய், 21 செப்டம்பர் 2010 (20:03 IST)
புது டெல்லியில் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்கும் கிராமம் வாழத் தகுதியற்றது என்று காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் கூறிய கருத்திற்காக நாம் வெட்கப்படத் தேவையில்லை என்று போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் லலித் பானட் கூறியுள்ளார்.

புதுடெல்லி வந்த காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்புக் குழுவினர், போட்டிகளுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். போட்டிகளில் பங்கேற்கப்போகும் வீரர்களும் வீராங்கனைகளும் தங்க வைக்கப்படவுள்ள கிராமத்தையும் பார்த்தனர். அதனை முழுமையாக சுற்றிப் பார்த்த அவர்கள், அது “தங்கத் தகுதியற்றது” என்று கூறியது மட்டுமின்றி, அக்குழுவின் தலைவர் மைக்கோல் ஃபென்னல் மத்திய அமைச்சரவைச் செயலருக்கு கடிதம் எழுதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போட்டி ஒருங்கிணைப்பாளரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பேச்சாளருமான லலித் பானட், தூய்மைத் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு, எனவே மைக்கேல் ஃபென்னல் தெரிவித்துள்ள கருத்து குறித்து நாம் வெட்கப்பட ஏதுமில்லை என்று கூறியுள்ளார்.

“போட்டிகள் கிராமம் குறித்து மைக்கேல் ஃபென்னல் எழுதிய கடிதத்தை பெற்றுள்ளோம். கிராமத்தில் நிலவும் தூய்மை குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். அது ஒரு பெரும் பிரச்சனை அல்ல, அதற்காக நாம் வெட்கப்படவும் தேவையில்லை. அது போட்டிகளை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று பானட் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்