20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து பலூன் புஸ்ஸ்ஸ்...
செவ்வாய், 25 மார்ச் 2014 (09:19 IST)
அன்று அயர்லாந்து நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை 13.5 ஓவர்களில் விளாசி அதிரடியாக இருபது ஓவர் உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து பலூன் நேற்று இலங்கையால் பஞ்சர் செய்யப்பட்டது.
FILE
அதுவும் சொத்தை அணிகளை அடித்து நொறுக்குவதில் இலங்கைக்கு நிகர் இலங்கைதான்! T20 கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஸ்கோரான 39 ரன்களுக்கு நெதர்லாந்து சுருண்டது. அதனை 5 ஓவர்களில் எடுத்தது மற்றொரு சாதனை. இதெல்லாம் ஒரு சாதனை என்று நினைத்துக் கொண்டால்!
11 ஓவரில் நெதர்லாந்து கதை முடிந்தது. மேத்யூஸ் 3 விக்கெட்டுகள், அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகள், மலிங்கா 2 விக்கெட்டுகள். நெதர்லாந்தில் கூப்பர் மட்டுமே அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார். மற்றபடி ஸ்கோர் இதோ: 0 0 1 0 8 4 1 3 0 0. கால்காப்பில் பட்டு லெக்பை கணக்கில் 6 ரன்கள். நெதர்லாந்தின் பேட்ஸ்மென்களின் பேட்டில் பட்ட பந்துகளை விட காலில் பட்ட பந்துகள் அதிகம் போலும்.
இலங்கை இலக்கைத் துரத்த களமிறங்கியது. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் டிம் வான் டெர் குடென் ஆக்ரோஷ பந்தில் குஷால் பெரேரா கட்டை விரலை பெயர்த்தார்.
ஆட்டம் தொடங்கியதும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் ஜிம்பாவேயை வெளியேற்றி நெதர்லாந்து உள்ளே வந்தது.
இலங்கைக்கு 2 புள்ளிகள், நெட் ரன் விகிதத்தில் மிகப்பெரிய பிளஸ்.