முத்தரப்பு இருபது ஓவர் தொடர்: ஜிம்பாப்வேயிடம் தோல்வி தழுவிய தென் ஆப்பிரிக்கா

வெள்ளி, 22 ஜூன் 2012 (15:59 IST)
ஜிம்பாப்வேயில் முத்தரப்பு இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வே, வங்கதேசம், தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் 3 போட்டிகளில் ஜிம்பாப்வே 2 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா ரன் விகித அடிப்படையில் 4 புள்ளிகளுடன் 2வது இடம் வகிக்கிறது. வங்கதேசமும் 4 புள்ளிகள் பெற்றிருந்தாலும் ரன் விகித அடிப்படையில் 3ஆம் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இன்று ஹராரேயில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா, நாளை ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது தென் ஆப்பிரிக்கா. இதன் பிறகு இறுதிப் போட்டி 24 ஆம் தேதி ஹராரேயில் நடைபெறுகிறது.

வங்கதேசம் இன்று வெற்றி பெற்றேயாகவேண்டிய நிலை. அப்படி வென்றால் 8 புள்ளிகள் பெறும், தென் ஆப்பிரிக்கா நாளை ஜிம்பாப்வேயை வீழ்த்தினால் 8 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 8 புள்ளிகள் என்றால் ரன் விகித அடிப்படையில் சிறந்த ரன் விகிதம் உள்ள அணிகளே இறுதியில் விளையாடும்.

இன்று வங்கதேசம் வென்று 8 புள்ளிகள் பெற்று, நாளை ஜிம்பாவே மீண்டும் தென் ஆப்பிரிக்காவை வீழ்திவிட்டால் தென் ஆப்பிரிக்க அணி பலமான அணியாக இருந்தபோதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறாது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 176 ரன்களை விளாச, தென் ஆப்பிரிக்கா 147 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுக்க வங்கதேசம் 17.3 ஓவர்களில் 153/4 என்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் வங்கதேசம், தென் ஆப்பிரிக்க மோதும் இன்றைய இருபது ஓவர் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்