கிரிக்கெட் செய்தி: இலங்கை விக்கெட்டுகள் சரிவு 76/5

வியாழன், 8 செப்டம்பர் 2011 (12:33 IST)
பல்லிகெலி மைதானத்தில் இன்று துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முதல் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

துவக்கத்திலேயே இலங்கைக்கு பின்னடைவு ஏற்பட்டது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. அவருக்குப் பதிலாக செகுகே பிரசன்னா என்றை லெக் ஸ்பின்னர் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாஸ் வென்ற தில்ஷான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். 3வது ஓவரில் ரயான் ஹேரிஸ் வீசிய வெளியே சென்ற பந்தை மிகவும் தளர்ச்சியான ஒரு ஷாட்டை அடித்து விக்கெட் கீப்பர் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து துவக்க வீரர் பரனவிதனா ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

சரியாக 3 ஓவர்களுக்குப் பிறகு இளம் வேகப்பந்து வீச்சாளர் கோப்லேண்ட் வீசிய அபாரமான இன்ஸ்விங்கர் ஆஃப் ஸ்டம்பைத் தாக்காது என்று தில்ஷான் ஆடாமல் விட்டு விட பந்து நன்றாக இன்ஸ்விங் ஆகி ஸ்டம்ப்களைத் தாக்கியது. தில்ஷான் 4 ரன்களில் அவுட்.

கடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமான ஜெயவர்தனே சதம் எடுத்தார் ஆனால் இந்த முறை அவர் 4 ரன்கள் எடுத்திருந்தபோது கோப்லேண்ட் வீசிய ஆஃப் ஸ்டம்ப் குட் லெந்த் பந்தை ஒரு சுழற்று சுழற்றினார் பந்து டீப் தேர்ட்மேன் திசையில் காற்றில் எழும்பியது. மைக் ஹஸ்ஸி காற்றில் பாய்ந்து இடது கையில் அபாரமாக பிடித்தார்.

சங்கக்காராவும், சமரவீராவும் இணைந்து 43 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 17 ரன்கள் எடுத்த சமரவீரா ஹேரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசியாக ஒரே ஓவரில் ஸ்பின்னர் லயான் ஓவரில் ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்த பிரசன்ன ஜெயவர்தனே 18 ரன்கள் எடுத்திருந்தபோது அதே ஓவரில் மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப்பை ஆட முயன்று ஃபைன்லெக் திசையில் ஹேரிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

தற்போது சங்கக்காரா 29 ரன்களுடனும் மேத்யூஸ் 0 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்ட்ரேலிய தரப்பில் ஹேரிஸ், கோப்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளையும் லயான் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்