இந்தியா 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

திங்கள், 27 டிசம்பர் 2010 (13:55 IST)
டர்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் 6 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய தன் முதல் இன்னிங்சில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இன்று 183/6 என்று களமிறங்கிய இந்திய அணி மீண்டும் ஸ்டெய்ன், மோர்கெல் ஆகியோரின் துல்லியமான, ஆக்ரோஷமான பந்து வீச்சிற்கு ரன் எண்ணிக்கையை உயர்த்தப் போராடினர்.

21 ரன்கள் எடுத்த ஹர்பஜன் சிங் மேலும் ஒரு டேல் ஸ்டெய்ன் பந்தை எட்ஜ் செய்ய அதனை டீவிலியர்ஸ் அபாரமாக ஒரு கையில் கேட்ச் பிடித்தார்.

அடுத்ததாக ஜாகீர் கான் ஸ்கோரர்களை வற்புறுத்தவில்லை அவர் மோர்கெல் பந்தில் பௌச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு தோனி டேல் ஸ்டெய்ன் பந்தில் ஒரு ஹுக் பவுண்டரியும், பிறகு லாங் ஆஃப் திசையில் ஒரு மிகப்பெரிய சிக்சரையும் எடுத்து 35 ரன்களில் ஸ்டெய்னின் பந்தை தூக்கி பாயிண்ட் திசையில் அடிக்க முயன்று அங்கு நின்று கொண்டிருந்த ஒரே ஃபீல்டர் பீட்டர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஸ்ரீசாந், மோர்கெலின் பந்தை ஒரு சுழற்று சுழற்றினார் ஆனால் பந்து பவுச்சரைத்தாண்டவில்லை.

15-வது முறையாக 5-ம் அதற்கு மேற்பட்டும் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டெய்ன். அவர் 50 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், மோர்கெல், சொட்சொபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்