வெற்றியை நோக்கி ஆஸ்ட்ரேலியா

சனி, 18 டிசம்பர் 2010 (16:20 IST)
பெர்த்தில் நடைபெறும் ஆஸ்ட்ரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான இன்று இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி இலக்கு 391 ரன்கள்.

இதனால் ஆஸ்ட்ரேலியா தொடரை 1- 1 என்று தொடரை சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 119/3 என்று துவங்கிய ஆஸ்ட்ரேலியா 309 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 391 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அதிர்ச்சித் துவக்கம் கண்டது.

காரணம் ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களில் புதிய உத்வேகம். ஜொனாதன் டிராட் 31 ரன்களுக்கு அபாரமாக விளையாடினார். ஆனால் அவர் மிட்செல் ஜான்சனின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் எட்ஜ் செய்தார் அதனை பாண்டிங் தட்டி விட பிராட் ஹேடின் பிடித்தார்.

பிறகு கடைசி ஓவரின் கடைசி பந்தில் பால் காலிங்வுட், ரியான் ஹேரிஸ் வீசிய பந்தை எட்ஜ் செய்தார். அதனை கிளார்க் அபாரமாக பிடித்தார்.

முன்னதாக அலைஸ்டர் குக், ரியான் ஹேரிஸ் பந்தில் பின்னங்கால் காப்பில் வாங்க எல்.பி.டபிள்யூ. ஆனார். இவர் 13 ரன்கள் எடுத்தார். ஜான்சன் பந்தில் 15 ரன்களுக்கு ஸ்ட்ராஸ் ஆட்டமிழந்தார்.

முக்கியமாக கெவின் பீட்டர்சன் 3 ரன்கள் எடுத்து ஹில்ஃபென் ஹாஸ் பந்தில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்ட்ரேலிய அணியில் ஜான்சன் இரண்டு விக்கெட்டுகளையும், ரியான் ஹேரிஸ் 2 விக்கெடுகளையும் வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்