தேநீர் இடைவேளை: தென் ஆப்பிரிக்கா 236/2

வெள்ளி, 17 டிசம்பர் 2010 (19:00 IST)
சென்சூரியன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் மிகக்குறைவான 136 ரன்கள் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஜாக் காலிஸ் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்தும், ஹஷிம் அம்லா 78 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 50 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.

துவக்க விக்கெட்டுக்காக ஸ்மித், ஆல்வீரோ பீட்டர்சன் ஆகியோர் 111 ரன்களைச் சேர்த்த பிறகு ஹர்பஜன் சிங் பந்தில் ஸ்மித் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு அம்லாவும், பீட்டர்சனும் 2-வது விக்கெட்டுக்காக 55 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 77 ரன்கள் எடுத்திருந்த பீட்டர்சன் ஹர்பஜன் சிங் பந்தில் ஷாட்லெக்கில் இருந்த கம்பீரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு அம்லாவும், காலிஸும் இணைந்து 15 ஒவர்களில் இதுவரை 70 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர்.

ஹஷிம் அம்லாவுக்கு ஹர்பஜன் பந்தில் தோனி ஒரு கேட்ச் வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆனால் கடினமான வாய்ப்பு அது.

தேவையில்லாமல் ரெய்னாவுக்கு பந்து வீச வாய்ப்பளித்தார் தோனி, அவர் 2 ஓவர்களில் 23 ரன்களை கொடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்தார்.

ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் செமத்தியாக அடி வாங்கினார். அவர் 14 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இவர் இன்னமும் இந்த களத்தில் வீசவேண்டிய லெந்தை கண்டுபிடிக்கவில்லை. ஒன்று முழு லெந்தில் வீசுகிறார் இல்லை ஷாட் பிட்சாக வீசி வாங்கிக் கட்டிக் கொள்கிறார்.சரியான, முறையான அறிவுரை அவருக்கு கிடைக்கவில்லை.

அதே போல்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் எரிக் சைமன்ஸ் என்ற தென் ஆப்பிரிக்க பந்து வீச்சு பயிற்சியாளர்தான் உள்ளார் ஆனால் வேகப்பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை.

தென் ஆப்பிரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்தியா மிகுந்த சிரமப்படவேண்டும். ஆனால் அதற்கும் முயற்சி என்பது வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்