இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்கா விமரிசையான வரவேற்பு
செவ்வாய், 14 டிசம்பர் 2010 (12:23 IST)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதையடுத்து இதுவரை எந்த நாட்டுக்கும் அளிக்காத ஒரு அதிகார பூர்வ வரவேற்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிகழ்த்திக்காட்டியுள்ளது.
கடந்த இரவு இந்த சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் செயலதிகாரி ஜெரால்ட் மஜோலா இந்திய அணியை வரவேற்றார்.
தென் ஆப்பிரிக்க, இந்திய வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்திய அதிகாரி விக்ரம் துரைசாமியும் இதில் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டு பேசிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கத் தலைவர் நயோகா, தோனியின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகின் நம்பர் 1 அணியாக இருப்பதற்கு தகுதியானதுதான் என்றார்.
"இந்த அணிதான் கடந்த 2 ஆண்டுகளில் தங்களுக்கு எதிராக விளையாடிய அனைத்து அணிகளையும் வென்றுள்ளது, இதனால் நம்பர் 1 டெஸ்ட் அணியாகத் திகழ இந்திய அணிக்கு முழுத் தகுதி உள்ளது." என்றார் அவர்.
சச்சின் டெண்டுல்கரைப் பாராட்டி நயாகோ கூறுகையில், "பல ஆண்டுகள் இவர் வழங்கிய அபூர்வ கிரிக்கெட் நினைவுகளுக்காக அவருக்கு நன்றிகளைப் பதிவு செய்கிறேன், நீங்கள் ஒரு உண்மையான ஹீரோ, உண்மையான சாம்பியன், இன்றைய கிரிக்கெட்டில் நீங்கள்தான் அதிகம் கொண்டாடப்படுபவர், ஒரு விளையாட்டு வீரராக, ஒரு மனிதராக நான் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன்." என்றார்.
அதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் நட்பு, சகோதரத்துவ முறையில் மேலும் நீடிக்கும் என்று கூறினார்.