கொச்சி அணிக்கு பதிலாக அகமதாபாத் அல்லது ராஜ்கோட்

வெள்ளி, 19 நவம்பர் 2010 (11:39 IST)
2011ஆம் ஆண்டு ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் கொச்சி அணியின் நிலை ஏறத்தாழ முடிவுக்கு வந்த நிலையில் அந்த அணிக்கு பதிலாக புதிய ஏலத்தில் அகமதாபாத் அல்லது ராஜ்கோட் அணிகள் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.

முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்சும், 2-வது போட்டியில் டெக்கான் சார்ஜர்சும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்சும் சாம்பியன் பட்டம் பெற்றது.

4-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் புதிதாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. இதனால் 4-வது ஐ.பி.எல். போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே விதி முறைகளை மீறி செயல்பட்டதாக கூறி ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அதிரடியாக நீக்கப்பட்டன. 8 அணிகள் தான் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதேபோல புதிதாக இடம் பெற்ற கொச்சி அணியில் சிக்கல் இருந்தது. பங்குதாரர்கள் இடையே இணைப்பு உருவாவுதால் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தீர்வு ஏற்பட 1 மாதம் வரை அந்த அணிக்கு கெடு விதிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை கொச்சி அணிக்குள்ள பிரச்சினை தீர்ந்த பாடில்லை. வருகிற 27-ந்தேதி அந்த அணியின் காலக்கெடு முடிகிறது.

இதற்கிடையே கொச்சி அணி நீக்கப்படும் பட்சத்தில் புதிததாக ஒரு அணியை ஏலத்தில் எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

கொச்சி அணிக்கு பதிலாக அகமதாபாத் அல்லது ராஜ்கோட் அணி தேர்வு பெறும் என்று தெரிகிறது. இதற்கான ஏலம் டிசம்பர் 15-ந்தேதி நடைபெறும்.

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறும்போது, அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் ஏலத்தில் கட்டாயம் பங்கேற்கலாம் என்றார்.அகமதாபாத் அணியை வாங்க அனில் அம்பானியும், அதானி குரூப்பும் விரும்புகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்