லக்ஷ்மண், இஷாந்த் முன்னேற்றம்

செவ்வாய், 31 மார்ச் 2009 (11:58 IST)
நியூஸீலாந்து அணிக்கு எதிராக நேப்பியர் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் எடுத்து தோல்வியிலிருந்து இன்டிய அணியைக் காப்பாற்றிய வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி 15ஆம் இடத்திற்கு வந்துள்ளார்.

இஷாந்த் ஷர்மா டெஸ்ட் பந்து வீச்சு தரவரிசையில் 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

துவக்க வீரர் கம்பீர் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முன்னணியில் உள்ள ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 5ஆம் இடத்தில் உள்ளார்.

இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் இன்னமும் தனது மட்டைக்கு வேலை வைக்காத சேவாக் ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் 17-வது இடத்திற்கு பின்னடைந்தார்.

டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்திய சுவர் ஷிவ் நாராயண் சந்தர்பால் இன்னமும் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக யூனிஸ் கான், குமார் சங்கக்காரா ஆகியோர் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசையில் முரளிதரன் முதலிடத்தையும் தென் ஆப்பிரிக்காவின் வேகப்புயல் டேல் ஸ்டெய்ன் 2-வது இடத்தையும் தக்கவைத்துள்ளனர்.

ஐ.சி.சி. டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்