நியூஸீலாந்து சவாலுக்கு தயார்-சேவாக்

வியாழன், 5 மார்ச் 2009 (15:13 IST)
நாளை வெலிங்டனில் நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக பலமாக எழுச்சியுறும் ஆனால் எந்த விதமான சவாலுக்கும் அணி தயாராக இருப்பதாக இந்திய அணியின் துணைத் தலைவர் விரேந்திர சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெலிங்டன் மைதானத்தில் கடைசி 5 ஒரு நாள் போட்டிகளிலும் நியூஸீலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 15 போட்டிகளில் 10-ஐ வென்றுள்ளது நியூஸீலாந்து அணி.

எனவே இந்த அணியை வெலிங்டனில் எதிர்கொள்வது சவாலாகவே அமையும் என்று கூறிய சேவாக் எந்த சவாலையும் சந்திக்கத் தயார் என்று கூறியுள்ளார்.

"கடந்த ஒரு நாள் போட்டியில் நாம் நிறைய ரன்களைக் குவித்தோம், ஆனால் இதனால் அந்த அணியை குறைவாக எடை போட முடியாது, அவர்களில் சிலருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் குறைவு அவ்வளவே. கைல் மில்ஸ், வெட்டோரி மட்டுமே அனுபவ வீரர்கள். இருப்பினும் மற்ற வீரர்கள் உயர் மட்ட கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்களே" என்றார் சேவாக்.

எந்த ஒரு பந்து வீச்சாளாரையாவது குறிப்பாக அடிக்க இலக்க்கு கொண்டுள்ளாரா என்ற கேள்விக்கு, சேவாக் பதிலளிக்கையில், " எனக்கு எந்த பந்து வீச்சாளரும் இலக்கு அல்ல, நான் எனது இயல்பான ஆட்டத்தையே விளையாடுகிறேன்" என்றார்.

இந்திய அணியில், யுவ்ராஜ், ரெய்னா, தோனி, யூசுஃப் பத்தான் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர், இவர்களிடமிருந்து அதிவேக ரன் குவிப்பை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார் சேவாக்.

துவக்கத்தில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவால் 300 ரன்களைக் குவிக்க முடியும் என்று கூறிய சேவாக் இந்தியாவின் பேட்டிங்கே அதன் வலிமை என்றார்.

இரண்டு இருபதுக்கு 20 போட்டியிலும், முதல் ஒரு நாள் போட்டியிலும் பந்து வீசவில்லையே என்று கேட்டதற்கு, தோனி கொடுத்தால் வீசுவேன், அவரிடம் இரு முறை பந்தைக் கொடுக்குமாறு தான் கேட்டதாக தெரிவித்தார்.

ஆட்டக்களங்கள் குறித்து தெரிவித்த சேவாக், நியூஸீலாந்தில் பந்துகள் மட்டைக்கு விரைவாக வருவதால் இங்கு பேட்டிங் செய்வது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விஷயம் என்றார்.

தனது பேட்டிங் முறை குறித்து கூறிய சேவாக், "எனது உருவாக்க காலங்களில் நான் நிறைய 10 அல்லது 15 ஓவர்கள் கிரிக்கெட்டில் விளியாடியுள்ளேன், 10 ஓவர்கள் விளையாடினால் 60 பந்துகளிலும் ரன் அடிக்கவே தோன்றும். இதனால்தான் எனது ஆட்டம் இவ்வாறு உள்ளது" என்றார்.

இருபதுக்கு 20 போட்டியில் வேக ரன்களை குவிக்கும் முயற்சியில் விரவில் ஆட்டம் இழந்தக்டு தவறு என்று உணர்ந்ததால் ஒரு நாள் போட்டிகளில் 10 முதல் 15 ஓவர்கள் வரை விக்கெட்டை கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்தேன், அவ்வாறு விளையாடினால் அணியை வலிமையான நிலைக்கு கொண்டு செல்ல முடியும்" என்று கூறினார் சேவாக்.

வெப்துனியாவைப் படிக்கவும்