ஓய்வு பெற்ற ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் மேத்யூ ஹெய்டன் இந்திய நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், விரேந்திர சேவாக் ஆகியோரை பாராட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகளாவிய கிரிக்கெட் பிம்பம் என்கிறார் ஹெய்டன். அதே போல் விரேந்தர் சேவாக் பற்றி கூறுகையில்: " என்னைப்போலவே அவரும் ஒரு மிகச்சிறந்த வீரர், நான் பார்க்க விரும்பும் ஒரு வகையான ஆட்டம் சேவாகிடம் உள்ளது. அவருக்கு எதிராக விளையாடுவதில் பெரும் பங்கு மகிழ்ச்சியுடன் விளையாடியுள்ளேன்" என்றார்.
4 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களை அடுத்தடுத்து 3 முறை அடித்து சாதனை புரிந்துள்ள ஒரே வீரர் மேத்யூ ஹெய்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது காலத்தில் தன்னுடன் விளையாடிய சிறந்த பேட்ஸ்மென்களாக அவர் பிரைன் லாரா, ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரையும் சிறந்த பந்து வீச்சாளர்களாக கர்ட்லி ஆம்புரோஸ், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பற்றி குறிப்பிடுகையில் " சச்சின் ஒரு உலகளாவிய பிம்பம், கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இந்தியாவில் விளையாடியபோது இந்திய அணியில் அவரது செல்வாக்கு எனக்கு தெரிய வந்தது. அவரது ஆட்டமும் அந்த செல்வாக்கை நியாயப்படுத்துவதாய் இருந்தது. அவர் ரன்கள் எடுக்க வேண்டும், அதனைச் செய்தார் சச்சின்" என்றார்.
அதே போல் ராகுல் திராவிடும் உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஹெய்டன் ஒரு முறை ராகுல் திராவிட் பற்றி கூறுகையில், எதுவும் பேசாமல் அமைதியாக, தன்னை ஆட்டமிழக்கச் செய்வது அவ்வளவு சுலபமல்ல என்ற வெறி அவரது கண்களில் தெரியும் என்று கூறியிருக்கிறார் மேத்யூ ஹெய்டன்.
தொடர்ந்து ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடுவேன் என்று கூறியுள்ள ஹெய்டன் ஏப்ரல் மாதம் துவங்கும் இரண்டாவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 தொடரில் இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்வோம் என்று கூறியுள்ளார்.