சேவாகுடன் விஜய் துவங்குவார்-தோனி!

புதன், 5 நவம்பர் 2008 (15:27 IST)
துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீருக்கு ஒரு போட்டி தடை விதிக்கப்பட்டதால் நாளை நாக்பூரில் துவங்கும் 4-வது இறுதி டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் எம்.விஜய் சேவாகுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று இந்திய டெஸ்ட் அணியின் புதிய தலைவர் தோனி கூறியுள்ளார்.

ஆனால் கௌதம் கம்பீர் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய அடியே என்று கூறிய தோனி, சேவாகும் கம்பீரும் இந்த தொடரில் சில சிறப்பான துவக்கங்களை கொடுத்ததால் நடுவரிசை வீரர்கள் அழுத்தத்தை உணராமல் ஆட முடிந்தது என்றார்.

எம்.விஜய் பற்றி தோனி குறிப்பிடுகையில், நாளை அவர் முதல் போட்டியை விளையாடுகிறார் என்பதற்கும் 10 போட்டிஅகளுக்கு பிறகு இந்தியாவிற்காக முதல் போட்டியை ஆடுகிறார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை, ஏனெனில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எந்த தருணத்தில் ஆடினாலும் அழுத்தம் இருக்கத்தான் செய்யும் என்றார்.

மகாராஷ்டிராவுடன் ரஞ்சி கோப்பை போட்டியில் நாசிக்கில் தமிழக வீரர் விஜய் இரட்டை சதம் அடித்தார். குறிப்பாக விஜயை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த தோனி வீரர் தேர்வு விவகாரங்கள் குறித்து தன்னால் கருத்து கூற இயலாது என்றும், விஜயை சாலஞ்சர் தொடரில் பார்த்த போது அவரது திறமை வெளிப்பட்டது என்றார்.

மேலும் இப்போதைக்கு விஜய் துவக்க வீரராக களமிறக்கும் முடிவில் இருப்பதாகவும், திட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்தால் ஆட்டம் துவங்குவதற்கு முன்புதான் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே கவுதம் கம்பீர் அணியில் இல்லாததை தங்களுக்குக் சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என்று ஆஸ்ட்ரேலிய அணித்தலைவர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

"கம்பீர் முதல் டெஸ்ட் முதலே நன்றாக விளையாடி வருகிறார், சேவாகுடன் இணைந்து நல்ல துவக்கத்தை பெற்றுத் தந்தார், இவர்கள் இருவரும் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடினர். இந்த இருவரிடையே நல்ல புரிதல் இருந்தது, தற்போது அவர் இல்லாததால் இந்திய அணிக்கு சற்றே அழுத்தம் ஏற்படும்" என்றார்.

அதேபோல் தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடும் சௌரவ் கங்கூலி பற்றி கூறுகையில், "இந்திய கிரிக்கெட்டிற்கு இவர் அரும் சேவையாற்றியுள்ளார், தலைமைப் பொறுப்பில் அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றுள்ளார், இந்த கடைசி தினங்களை அவர் மகிழ்ச்சியுடன் முடிக்க விரும்புவார், ஆனால் அதனை முறியடிக்க நாங்கள் தயாராகிவிட்டோம், வெற்றி பெற்று அவரது மகிழ்ச்சியை கெடுப்போம் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்