ஒலிம்பிக்கில் இருபது-20: யூனிஸ்கான், மாலிக் ஆதரவு!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:46 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் இருபது-20 கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்று ஆஸ்‌ட்ரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்திய கருத்திற்கு, பாகிஸ்தான் அணித்தலைவர் சோயிப் மாலிக், மூத்த வீரர் யூனிஸ்கான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய மாலிக், கிரிக்கெட் மூலமாக தாய்நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் பெருமைக்குரிய ‌விடயம் என்றும், குறுகிய காலத்தில் நிறைவுபெறக் கூடிய இருபது-20 கிரிக்கெட் போட்டிகள் ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு ஏற்புடையதாக இருக்கும் என்றும் கூறினார்.

எனவே, விரைவில் இருபது-20 கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பும் (ஐ.சி.சி), சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஐ.ஓ.சி) நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாலிக் வலியுறுத்தியுள்ளார்.

பிற அணி விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பிடித்துள்ளதை சுட்டிக்காட்டிய யூனிஸ்கான், கிரிக்கெட் போட்டியை மட்டும் ஏன் ஒலிம்பிக்கில் சேர்க்கக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

உலகளவில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ள கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதே சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்த யூனிஸ்கான், அது 10 ஓவர், 20 ஓவர் அல்லது 50 ஓவர் போட்டியா என்பது முக்கியமில்லை என்றார்.

ஒலிம்பிக்கில் இருபது-20 போட்டிகளை சேர்க்க வேண்டும் என கடந்த 4ஆம் தேதி கில்கிறிஸ்ட் வெளியிட்ட கருத்துக்கு, கங்கூலி, சங்கக்காரா, ஸ்டீபன் பிளமிங் உள்ளிட்ட சர்வதேச வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்