தோனிக்கு கேல்ரத்னா விருது: மில்காசிங் விளக்கம்!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:20 IST)
PTI PhotoFILE
இந்திய ஒருநாள், இருபது-20 கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனிக்கு, விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது சரிதான் என மில்காசிங் நியாயப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மிகக் குறைந்த காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்று பல சாதனைகள் புரிய தோனி உதவியதாக குறிப்பிட்ட மில்காசிங், இதுபோன்றதொரு ‌விடயத்தை எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் இதுவரை செய்ததில்லை என்றார்.

கேல்ரத்னா விருதுக்கு அவரை தேர்வு செய்யக் கோரி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) இருந்து கடந்த ஜூலை 27ஆம் தேதி விண்ணப்பம் வந்ததாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு வீரர்களில், தோனி இதற்கு பொருத்தமானவர் என்பதால் அவரை தேர்வு செய்ததாகவும் மில்கா சிங் விளக்கியுள்ளார்.

கடந்த திங்களன்று (4ஆம் தேதி) நடந்த விருது தேர்வுக்கு முன்பாக, தமக்கு தினமும் 300 முதல் 400 தொலைபேசி அழைப்புகள் வரை வந்ததாகவும், அதில் பேசியவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விருதினை அறிவிக்கும்படி வலியுறுத்தினாலும், கேல்ரத்னா விருதுக்கு தகுதியானவர் என்பதால் தோனி பெயரை அறிவித்ததாகவும் மில்காசிங் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்