மெண்டிஸ் பந்துவீச்சை சமாளிக்க விஸ்வநாத் அறிவுரை!

திங்கள், 21 ஜூலை 2008 (17:21 IST)
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் பந்துவீசும் போது அவரது மணிக்கட்டு அசைவை கவனித்தால் எளிதாக விளையாடலாம் என இந்திய வீரர்களுக்கு முன்னாள் வீரர் குண்டப்பா விஸ்வநாத் அறிவுரை கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த விழாவில் நேற்று பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாத், மெண்டிஸ் பந்தை கையில் இருந்து விடுவிக்கும் முன் அவரது விரல்கள் மற்றும் மணிக்கட்டு பகுதியை நன்றாக கவனித்தாலே போதும், அவரை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்றார்.

கான்பூரில் கடந்த 1969இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய விஸ்வநாத், 2வது இன்னிங்சில் 137 ரன் குவித்தார். அப்போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜான் கிலீசன் சுழற்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், விஸ்வநாத் மட்டும் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில், மெண்டிஸின் அபார சுழற்பந்து வீச்சால் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்