இந்திய பயணத்திற்கு தேர்வாவது கடினம்-கேடிச்!

திங்கள், 16 ஜூன் 2008 (16:12 IST)
மேத்யூ ஹெய்டன் காயமடைந்ததால் ஆஸ்ட்ரேலிய அணியின் துவக்க வீரராக தற்போது மேற்கிந்திய பயணத்தில் விளையாடி வரும் சைமன் கேடிச் அடுத்தபடியாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தேர்வாவது கடினம் என்று கூறியுள்ளார்.

தற்போதைய மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் இரண்டாவது, 3-வது டெஸ்ட் போட்டிகளில் சதம் எடுத்திருந்தாலும், மேத்யூ ஹெய்டன் இந்திய தொடருக்கு தயாராகிவிடுவார் என்பதால் தனது இடம் அணியில் சந்தேகமே என்று கூறியுள்ளார் சைமன் கேடிச்.

18 மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட கி‌ரிக்கெட் ஆஸ்ட்ரேலிய மைய ஒப்பந்தத்தில் சைமன் கேடிச் பெயர் இல்லை.

நன்றாக விளையாடியும், அணியில் தேர்வு செய்யப்படாமல் போவது சைமன் கேடிச்சிற்கு முதன் முறையாக நடக்கவில்லை.

2004-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் சைமன் கேடிச் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு முந்தைய டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக அவர் சதம் எடுத்தார். ஆனாலும் ஆஸ்ட்ரேலிய தேர்வுக்குழுவினர் அவரை இலங்கை அணிக்கு எதிராக தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்