நாக சைதன்யா - சமந்தா திருமணம்தான் ஹாட் ஆப் தி டவுன். நான் நாக சைதன்யாவை காதலிக்கிறேன். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் எங்களின் திருமணம் நடக்கும் என்று சமந்தா கூறிய பிறகும், அவரிடம் இந்த சமூகம் அதிகம் எதிர்பார்க்கிறது. திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா? எந்த முறைப்படி திருமணம் நடக்கும்? இந்துவா... கிறிஸ்தவ முறையா...?
சமந்தா பதில் சொல்லாத போது, மீடியாவே ஒரு கதையை கிளப்பிவிடும். நெற்றியில் பொட்டுடன் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தைப் பார்த்து, அவர் இந்து மதத்துக்கு மாறிவிட்டார் என்று செய்தி வெளியிட்டனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என சமந்தாவின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கிறிஸ்தவ முறைப்படியும், ஹைதராபாத்தில் இந்து முறைப்படியும் இரண்டுமுறை இவர்களின் திருமணம் நடைபெறும் என இன்னொரு வதந்தி.
திருமணம் முடியும்வரை இப்படி புதிது பதிதாக கிளம்பிக் கொண்டுதான் இருக்கும்.
விசாரணை
வெற்றிமாறனின் விசாரணை ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தமுறை விசாரணை ஆஸ்கர் வெல்லும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது. இந்த நேர்மறை சிந்தனை எப்போதும் நல்லது.
லாக்கப் நாவலை மையப்படுத்தி விசாரணை படத்தின் முதல் பகுதியை வெற்றிமாறன் எடுத்திருந்தார். இரண்டாவது பாதி அவரது கற்பனை. லாக்கப் நாவலை எழுதிய சந்திரகுமார், விசாரணைக்கு கண்டிப்பாக ஆஸ்கர் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார். எப்படி கிடைக்காமல் போகும் என்பதுவரை அவரது நம்பிக்கை நீண்டுள்ளது.
முந்தைய வருடங்களுடன் ஒப்பிட்டால் இந்த வருட தேர்வு மிகச்சரியானது. விசாரணைக்கு ஆஸ்கர் கிடைத்தால், விசாரணை போன்று ஹீரோயிசம் இல்லாத, அசட்டு காதல், பாடல்கள் இல்லாத திரைப்படங்கள் தமிழில் சிலவேனும் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?
நியாயப்படி அஸ்வின் இந்தப் பாடலை பாட வேண்டும். சௌந்தர்யா தனது இரண்டாவது படத்துக்கு இந்தப் பெயரைத்தான் தேர்வு செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
கணவரை பிரிந்து வாழும் சௌந்தர்யா, படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். முதல் படம் கோச்சடையான் போன்று இது ரிஸ்க்கான முயற்சி கிடையாது. அதிகம் புதுமுகங்கள் நடிக்கும் ரொமான்டிக் காமெடி. இந்தப் படத்துக்கு அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் நடிக்க புதுமுகங்களும் வரவேற்கப்படுகிறார்கள்.