தன்னை வியாழக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு, உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம், திருமணம் போன்றவற்றை அருள்பவர் குரு பகவான்.
மனிதர்களை நல்வழிக்கு கொண்டு செல்வதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. இதைத் தான் குரு பார்க்க கோடி நன்மை என்கிறார்கள். பிரம்ம தேவரின் மானச புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதா என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் குரு பகவான்.
இவர் அறிவில் சிறந்தவர். தேவர்களின் குருவாக திகழ்பவர். அவரது நுண்ணறிவின் காரணமாக பிரகஸ்பதி என்று அழைக்கப்பட்டார். பிரகஸ்பதி என்ற சொல்லுக்கு ஞானத் தலைவன் என்று பொருள். இவருக்கு மந்திரி, அமைச்சர், ஆசான், குரு, வியாழன் என பல பெயர்கள் உண்டு.
பிரகஸ்பதி, காசியில் பல காலம் சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார். இதன்காரணமாகவே அவர், தேவர்களுக்கு குருவாக விளங்கும் பதவியும், கிரக பதத்தில் வீற்றிருக்கும் பேறும் பெற்றார். இவருக்கு எம கண்டன், கசன் என்ற இரண்டு புதல்வர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக்கிரகர் ஆவார். மூன்று குணங்களில், சாத்வீக குணத்தைக் கொண்டவர். மஞ்சள் நிறம் உடையவர். அதனால் இவரை பொன்னன் என்றும், வியாழன் என்றும் கூறுவார்கள். தயாள சிந்தனை கொண்டவர்.
குரு பகவானின் 5, 7-ம் பார்வை சகல நன்மைகளையும் தரும். ஒருவரின் திருமண யோகத்திற்கு குரு பலம் மிகவும் அவசியம். தன்னை வழிபடுபவர்களுக்கு உயர்வான பதவியையும், மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர்.