பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம்.
பெருமாளை பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். எல்லா மாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.
பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும். இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது.