பிள்ளைகளின் வாழ்க்கை தரம் வசதி, வாய்ப்புகள் உயரும். குலதெய்வக் கோவிலை புதுப்பிப்பீர்கள். 16-ஆம் தேதி வரை புதன் 6-ம் வீட்டில் மறைந்தாலும் ஆட்சிப் பெற்று அமர்வதால் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் இருக்கும். அவ்வப்போது அசதி, சோர்வு, தொண்டைப் புகைச்சல், நரம்புச் சுளுக்கு வந்து நீங்கும்.
உங்கள் ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். 6-ம் வீட்டிலேயே குரு மறைந்திருப்பதாலும், அஷ்டமத்துச் சனி தொடர்வதாலும் பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலர் உங்களை தவறானப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள். மற்றவர்கள் குடும்ப விவகாரத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். தூங்கும் இடத்தையும் அடிக்கடி மாற்ற வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! பிறமொழி வாய்ப்புகளால் பயனடைவீர்கள். போராட்டங்களை கடந்து புத்துயிர் பெறும் மாதமிது.