இந்த ஹேவிளம்பி ஆண்டு தட்சிணாயன புண்ணிய காலத்தில் சரத் ருது, ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26-10-2017) வியாழக்கிழமை, சுக்லபட்ச (வளர்பிறை) சப்தமி, பூராடம் நட்சத்திரம், சுக நாம யோகம், கரஜை கரணம் நேத்திரம் 1, ஜீவன் 1/2, சூரியபகவான் ஹோரையில் பிற்பகல் மணி 3.23 ஐ.எஸ்.டி. அளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இங்கு, 23.1.2020 வரை சஞ்சரித்துவிட்டு 24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.
பொதுவாகவே குரு, சனி பகவான்களின் பெயர்ச்சிகள் அனைவரின் மனதிலும் ஓர் ஆச்சரியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக சனி பகவானின் பெயர்ச்சியால் நம் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.