முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம்!!

மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பாதையில் அமைந்துள்ளது. குடவரைக் கோயில் அழகன் முருகன் அன்னை தெய்வானையைக் கைத்தலம் பற்றிய அற்புதமான கலைக் கருவூல ஆலயம்.
திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி  ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார். இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில்  காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. 
 
வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் படிக்கட்டுகளில் ஏறினால் அற்புதமான கலைநயம் மிக்க சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்து கொண்டே சென்று முருகனை தரிசிக்கலாம்.
அண்ணன் ஆனைமுகன், துர்க்கை, தந்தை சிவன், மாமன் பெருமாள் ஆகியோருடன் காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி தரும் இறைவன் சோதிடக் கலைக்கு முதல் நூல் இயற்றியவன். அதன் அங்கமான வாஸ்து கலைக்கு இங்கு உயிரோட்டம் கொடுக்கிறான்.
 
வானுயர்ந்த வடக்கு நோக்கிய ஆலயத்துக்கு தெற்கில் நெடிதுயர்ந்த குன்று, வடக்கில் இருந்து வரும் ஈசானிய தெருத்தாக்கம் ஆலயத்துள்,  இறைவன் சன்னதிக்கு ஈசானியத்தில் குளம். எனவே வாஸ்து பலத்தால் இறைவன் எண்ணில்லா வரமளிக்கும் ஆலயம். எனவே வழிபடும்  மக்கள் கூட்டம் அதிகம். வாஸ்து பலம் குறைந்த வீடுகளில் வாழும் மக்கள் இங்கு வந்து வழிபடுவது வீட்டின் வாஸ்து குறைபாட்டை நீக்கும்.
 
முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும்.
 
அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால்  முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து  கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்