அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.
பல ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவை, வீதியுலாவுடன் சிறப்பாக நடைபெறுகிறது. அவற்றுள் சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள், மதுரை மீனாட்சி , சிதம்பரம் சிவகாமி , காஞ்சிபுரம் காமாட்சி , திருகடையூர் அபிராமி, திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டிணம் நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, ஆடிப்பூர திருநாள் புகழ்பெற்றவை ஆனாலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை என்றே கூறலாம்.