சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை எவ்வாறு வழிபாடு செய்வது...?

ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருநாள், 9.11.2021 (செவ்வாய்க்கிழமை) வருகிறது.

அன்றுதான் முருகப்பெருமான் ஆலயங்களில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். ஒரு சிலர் ஆறு நாட்கள் விரதம் இருந்து, இந்த கந்தசஷ்டியை அனுஷ்டிப்பார்கள். ஆறு நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள், கந்தசஷ்டி தினத்தன்று ஒரு நாள் மட்டுமாவது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
 
கந்தசஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, தூய ஆடை அணிந்து கந்த கவசம் படித்து, கந்தனை வழிபடுங்கள். சூரபதுமனை சம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டி பார்க்கப்படுகிறது.
 
எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் வெற்றியைப் பெறலாம் என்பது ஐதீகம். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. அதாவது சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால், குழந்தைப் பேறு கிடைக்காதவர்களுக்கு ‘அகப்பை’ எனப்படும் ‘கருப்பை’யில் குழந்தைப் பேறு உண்டாகும். குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது ‘கந்தசஷ்டிவிரதம்’ ஆகும்.
 
கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம், பதினாறு வகையான செல்வங்களையும் நாம் பெற முடியும். கந்தசஷ்டி அன்று பஞ்சமுக விளக்கேற்றி, கந்தனுக்குப் பிடித்த கந்தரப்பத்தையும், பாசிப்பருப்பு பாயசத்தையும் நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.
 
அன்றைய தினம் இனிப்பு பொருளை மட்டும் சிறிதளவு உட்கொண்டு, அருகில் இருக்கும் ஆயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். அப்படி செல்ல முடியாதவர்கள், வீட்டின் பூஜை அறையில் வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்