ஸ்ரீ சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு மைந்தர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர். அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட கௌதம முனிவர் கடும் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டாராம். பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்தி வேண்டிக்கொண்டதால் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு எனக் கூறினார் முனிவர்.
பிறகு அந்த சிஷ்யர்கள் இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் வேண்டி கேட்டனர். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்களின் ஆத்மா மட்டும் வைகுந்தம் செல்லும். உங்களின் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று கூறினாராம். சூரிய, சந்திரன் இதற்குச் சாட்சி என்று கூறி அவர்களுக்கு மோட்சம் அளித்தாராம்.