கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடத்தின் அருகில் கீழே விழுந்து நமது உடலில் உள்ள காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு இறைவனை வணங்க செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
நந்தியை வணங்கி அனுமதி பெற்ற பின்பே சிவனை வணங்க செல்ல வேண்டும். பிறகு சன்னதியில் முதலில் அருள்பாலிக்கும் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கி, அவருக்கு முன் தோப்புக்கரணம் போட வேண்டும். அடுத்து மூலஸ்தானத்தில் உள்ள சிவபெருமானை ஒரே சிந்தனையுடன் வணங்க வேண்டும். பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை வழிபட வேண்டும்.
கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் உட்கார்ந்து, பிரார்த்தனை செய்து, பின் மறுபடியும் கொடிக்கம்பத்திற்கு அருகில் சென்று வடக்கு நோக்கி தலை வைத்து, பெண்களாக இருந்தால் இரண்டு கை, இரண்டு கால், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் தரையில் படும்படியான பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்களாக இருந்தால் உடல் முழுவதும் தரையில் படும்படியான சாஷ்டாங்க நமஸ்காரமும் செய்துவிட்டு வெளியில் வரவேண்டும். இவ்வாறுதான் சிவ ஆலயங்களில் வழிபடவேண்டும்.