சென்னை பாக்ஸ் ஆபிஸில் இந்த முறையும் தமிழ்ப் படங்கள் தீவிரமான தோல்வியை பதிவு செய்துள்ளன. முக்கியமாக தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்.
கௌதம் தயாரித்த இந்தத் திரைப்படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 12 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. முக்கியமாக பாக்ஸ் ஆபிஸின் முதல் ஐந்து இடங்களில் இது இல்லை. மோகன்லால், கௌதமி நடிப்பில் வெளிவந்துள்ள நமது திரைப்படம் முதல் மூன்று தினங்களில் 6.85 லட்சங்களை மட்டுமே வசூலித்து பின் தங்கியுள்ளது.
5. லைட்ஸ் அவுட் (ஆங்கிலம்):
கபாலியால் லைட்ஸ் அவுட்டின் போகஸ் ஒருவட்டத்துக்குள்ளேயே உள்ளது. எனினும் சென்ற வார இறுதியில் இப்படம் 23.54 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 57.90 லட்சங்கள்.
4. ஜேஸன் பார்ன் (ஆங்கிலம்):
முதல்வார இறுதியில் 50 லட்சங்களுக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட படம், ஜேஸன் பார்ன். பார்ன் ரசிகர்கள் ஏமாற்றிவிட்டனர். முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 26.32 லட்சங்களை மட்டுமே வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. கபாலி பீவர் இன்னும் இருப்பதையே இந்த குறைவான வசூல் காட்டுகிறது.
3. சூஸைட் ஸ்கொய்ட் (ஆங்கிலம்):
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படமே முதலிடத்தில் உள்ளது. வில் ஸ்மித் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஹாரர் படம். சென்னையில் முதல் மூன்று தினங்களில் 26.06 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. திருநாள்:
ஜீவா, நயன்தாரா என்ற நட்சத்திர பெயர்கள் ரசிகர்களை திரையரங்குக்கு இழுத்து வந்ததால் படம் முதல் 3 தினங்களில் 58.12 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா என்று கேட்டால் தயங்காமல் இல்லை என்று சொல்லலாம். விமர்சகர்கள் படத்தை கழுவி ஊற்றுகிறார்கள். வரும் தினங்களில் வசூல் பாதாளத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
1. கபாலி:
அதே முதலிடத்தில் கபாலி. வார நாள்களில் 1.25 கோடியை வசூலித்த படம், வார இறுதியில் 75.21 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த வாரமும் கபாலியின் ஆதிக்கம் தொடரும். இதுவரை கபாலி சென்னையில் 10.27 கோடிகளை வசூலித்து ஐ வசூலை முறியடித்துள்ளது. ஐ யின் சென்னை வசூல், கிட்டத்தட்ட 10 கோடிகள்.
வரும் வெள்ளிக்கிழமை சில முக்கியமான திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளன. அதனால் கபாலி அடுத்த வாரம் தனது முதலிடத்தை இழக்க வாய்ப்புள்ளது.