மராட்டியத்தின் திரிவிக்ரம் கோயில்
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:34 IST)
இந்த வாரப் புனிதப் பயணத்தில் நாங்கள் உங்களை மராட்டிய மாநிலத்தில் உள்ள திரிவிக்ரம் கோயிலிற்கு அழைத்துச் செல்கிறோம். கந்தேஷ் பகுதியில் செந்தூர்ணி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் 1744இல் புகழ்பெற்ற துறவி ஸ்ரீ கடோகி மஹாராஜ் என்பவரால் நிறுவப்பட்டதாகும்.
திரிவிக்ரம் கோயிலின் சிறப்புகளைப்பற்றி அதன் தலைமைக் குரு சாந்தாராம் மஹாராஜ் பகத் பரவசத்துடன் விளக்கினார்.
ஸ்ரீ கடோகி மஹாராஜ் ஒவ்வொரு ஆண்டும் பந்தர்பூர் என்ற ஊருக்கு நடந்து சென்று கடவுள் வித்தல்-ஐ வழிபடுவது வழக்கம். இவ்வாறு ஒருமுறை அவர் பந்தர்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, கடவுளே அவருக்கு எதிரில் தோன்றி செந்தூர்ணி கிராமத்திற்கு அருகில் உள்ள ஆற்றின் கரையில் தான் உறங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்து காலண்டர்படி அது ஒரு கார்த்திகை மாதத்தின் ஏகாதசி நாள். தனது வராக வாகனத்துடன் தன்னை வெளியில் தோண்டி எடுத்து, கோயில் கட்டி பூஜைகள் செய்து வழிபடுமாறு ஸ்ரீ கடோகி மஹாராஜை கடவுள் கேட்டுக்கொண்டார்.
இதனால் பரவசமடைந்த ஸ்ரீ கடோகி மஹாராஜ் உடனடியாகத் தனது கிராமத்திற்குத் திரும்பி, இந்த நிகழ்ச்சியை கிராமத்தாரிடம் தெரிவித்தார். ஆனால், யாரும் அவரை நம்பவில்லை. அதற்குப் பதிலாக, அவரை பலவாறாகத் திட்டியதுடன் பைத்தியம் என்றும் அழைத்தனர். இதனால் மனம் தளராத ஸ்ரீ கடோகி மஹாராஜ், தான் ஒருவனே தோண்டி சிலையை வெளியே கொண்டு வருவது என்று முடிவு செய்தார்.
அவரது அயராத உழைப்பின் பலனாக, விரைவிலேயே பழமையான வராக (பன்றி) வாகனச் சிலை ஒன்றை அவர் கண்டுபிடித்தார். கிராமத்து மக்கள் இதைப் பார்த்து மிகுந்த வியப்பும் பரவசமும் அடைந்தனர். ஸ்ரீ கடோகி மஹாராஜை அவர்கள் போற்றியதுடன், அவருக்கு உதவியும் செய்தனர். அனைவரும் தோண்டியபோது நிலத்திற்கு அடியில் 25 அடி ஆழத்தில் கடவுள் வித்தலின் நான்கரை அடி உயரச் சிலையைக் கண்டனர். பின்னர், அந்தச் சிலையைக் கோயிலில் நிறுவி எல்லாப் பூஜைகளும் செய்து வழிபட்டனர்.
இன்னொரு சம்பவமும் உண்டு. அதாவது, கடவுளைக் காணும் ஆர்வத்தில் மக்கள் அனைவரும் தோண்டிக்கொண்டு இருந்தபோது, கடப்பாரை ஒன்று கடவுள் வித்தல் சிலையின் மூக்கில் தவறுதலாகப் பட்டுவிட்டது. உடனே, சிலையின் மூக்கில் இருந்து இரத்தம் வடியத்தொடங்கியதாம். இது அந்தக் காலத்தில் பெரும் அதிசயமாகும். இந்தச் சிலையின் சிறப்பு என்னவெனில், அதன் ஒருபுறத்தில் விஷ்ணு, மறுபுறத்தில் வித்தல், மற்றொருபுறத்தில் பாலாஜி என மூன்று கடவுள்களின் உருவங்கள் தெரிகின்றன. ஒரே சிலையில் மூன்று கடவுள்களின் உருவம் தெரிவதால் இது திரிவிக்ரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், பார்ப்போர் எண்ணங்களுக்கு ஏற்றவாறு இந்தச் சிலையின் பாவம் மாறுவதாகவும் சொல்லப்படுகிறது. திரிவிக்ரம் சிலையையும், அதன் வராக வாகனத்தையும் வழிபட்டால் தங்களின் துன்பங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
கார்த்திகை மாத ஏகாதசி நாளில் திரிவிக்ரம் கோயிலில் ஸ்ரீ கடோகி மஹாராஜ் இரத யாத்திரை நடத்தினார். அந்த வழக்கம் இப்போதும் பின்பற்றப்படுகிறது. 25 அடி உயரமுள்ள இரதம் யாத்திரைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரதம் 263 ஆண்டுகள் பழமையானதாகம். மராட்டிய மாநிலத்தில் உள்ள பழமையான இரதங்களில் இயங்கும் நிலையிலுள்ள ஒரே இரதமும் இதுவேயாகும்.
ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக் கொண்டாடப்படும் இரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.
எப்படி அடைவது?
சாலை வழியாக: ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜம்னெர் நகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திரிவிக்ரம் கோயில் உள்ளது.
இரயில் வழியாக: மத்திய இரயில்வேயில் ஜல்கான் ஒரு முக்கியச் சந்திப்பு ஆகும். இந்தச் சந்திப்பில் இருந்து செந்தூர்ணி கிராமம் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விமான வழியாக: அவுரங்காபாத் விமான நிலையம் இந்தக் கோயிலிற்கு அருகில் உள்ளது. அவுரங்காபாத்தில் இருந்து செந்தூர்ணி கிராமம் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.