அகமதாபாத்தில் இருக்கும் ஜகந்நாதர் ஆலயம், அதன் பொலிவினாலும், அலங்காரத்தினாலும் மிகவும் புகழ்பெற்றத் தலமாகும். அஹமதாபாத்தின் ஜமால்புர் நகரத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.
இந்த வாரப் புனிதப் பயணத்தில் இந்த ஜகந்நாதர் ஆலயத்திற்குத்தான் உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. துறவி நரசிங்க தாஸ்ஜியின் கனவில் வந்த ஜகந்நாதர், தனக்கும், தனது சகோதரன் பல்தேவ் மற்றும் சகோதரி சுபத்ராவிற்கும் சேர்த்து ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்று கூறினார். இதனை நரசிங்க தாஸ்ஜி மற்றவர்களிடம் சொல்ல, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கோயில் கட்டும் பணிகள் துவங்கி நடந்து முடிந்தன.
webdunia photo
WD
இந்தக் கோயிலில் ஜகந்நாதரின் திருவுருவம் எழுப்பப்பட்ட பின்னர் அந்த நகரத்தில் மகிழ்ச்சி நிலவியது. இந்த கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களையும் கவரும் வகையில், ஜகந்நாதர், பல்தேவ் மற்றும் சுபத்ராவின் திருவுருவச் சிலைகள் உள்ளன. 1878ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோயிலின் புனிதத் தன்மை இன்றளவும் நம்மை வியப்புக்குள்ளாக்குகிறது.
தற்போது இந்த கோயில் மிகவும் அழகாக அலங்கரிக்கப்படுவதையும், பல்வேறு தரப்பு மக்களும் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வதையும் நாம் காண்கிறோம்.
பல்வேறு பகுதியில் இருந்தும் இந்தக் கோயிலுக்கு மக்கள் வருகின்றனர். அதிகமான மக்கள் வருவதால் இந்த கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு வந்து இறைவனிடம் முறையிட்டால் தங்களது பிரச்சினைகளும், கவலைகளும் அகலும் என்று மக்கள் நம்புகின்றனர்.
webdunia photo
WD
இந்த கோயிலின் மற்றொரு சிறப்புத் தன்மை என்னவென்றால், இந்த கோயிலைச் சார்ந்த சதாவர்தா என்ற அறக்கட்டளையின் மூலம், ஏழை எளியவர்களுக்கும், இல்லாதோர்க்கும் உணவு வழங்கப்படுகிறது. துறவி நரசிங்கரின் விருப்பப்படி இது தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வந்து உணவருந்திவிட்டு செல்கின்றனர்.
எப்படிச் செல்வது
விமான மார்கம் : அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பல வாடகை வாகனங்கள் இந்த கோயிலுக்குச் செல்கின்றன.
ரயில் மார்கம் : அயமதாபாத் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள கலுபுர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. மேலும், மனிநகர் மற்றும் சபர்மதி ரயில் நிலையங்களில் இருந்தும் இக்கோயிலுக்கு எளிதாகச் செல்லலாம்.
சாலை மார்கம் : அஹமதாபாத்தின் முக்கிய நகர பேருந்து நிலையங்களில் இருந்து இந்த கோயிலுக்கு பேருந்துகள் செல்கின்றன. கீதாமந்திர் பேருந்து நிலையத்தில் இருந்து டாக்ஸி மூலம் கோயிலுக்குச் செல்லலாம்.