மும்பையில் உள்ள மிகவும் பழங்கால கோயில்களில் ஒன்றாகும் மஹாலக்ஷ்மி கோயில். ப்ரீச் கேன்டியின் பி. தேசாய் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. அரபிக் கடற்கரையில் அமைந்துள்ள இந்த அழகான கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
செல்வத்திற்கான கடவுளாக லக்ஷ்மியை இந்து மக்கள் வணங்குகிறார்கள். அதன்படிதான் இந்த கோயிலும் அமைந்துள்ளது. அதாவது கோயிலின் உள் பிரகாரம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. அங்கு பூஜைக்கான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.
webdunia photo
WD
மஹாலக்ஷ்மி கோயிலில் ஏராளமான கடவுள் சிலைகள் மிகவும் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக செல்வத்திற்காக லக்ஷ்மியை வணங்குவார்கள். ஆனால் இந்த கோயிலுக்கு என்று ஒரு தனி வரலாறு உண்டு.
இந்த மஹாலக்ஷ்மி கோயிலின் வரலாறு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அதாவது, பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மஹாலட்சுமி பகுதியை வோர்லியுடன் இணைக்க ப்ரீச் கேன்டி சாலையை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அப்பணிகளை முடிக்க முடியாத வகையில் அரபிக் கடலில் அலைகள் எழும்பின. இதனால் அந்த பணியை முடிக்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் அந்த வேலையை எடுத்திருந்த ஒப்பந்ததாரர் ராம்ஜி சிவாஜியின் கனவில் தோன்றிய மஹாலக்ஷ்மி, அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் கடவுள் சிலைகளை எடுத்து கோயில் கட்டி வழிபடுமாறு கூறினார்.
அதன்படி அவரும் இந்த மஹாலக்ஷ்மி கோயிலை கட்டி அந்த சிலைகளை வைத்து வழிபாடு செய்தார். அதன்பிறகுதான் கடல் அலைகளின் சீற்றம் குறைந்து ப்ரீச் கான்டி சாலை அமைக்கப்பட்டது என்கிறது வரலாறு.
webdunia photo
WD
கோயிலில் மஹாலக்ஷ்மி, மஹாகாளி, மஹாசரஸ்வதியின் படங்களும் நிறைந்துள்ளன. மூன்று திருவுருவங்களும் ஒன்று போல மூக்குத்தி, தங்க வளையல்கள், முத்து கழுத்தணிகள் அணிந்து தோற்றமளிக்கின்றன. இந்த திருவுருவப் படங்கள் அந்த கோயிலின் ஆன்மீகத் தன்மையைக் கூட்டும் வகையில் உள்ளன.
இந்த கோயிலுக்கு உண்மையான பக்தியுடன் வரும் பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறுகிறது என்று நம்பப்படுகிறது.
கோயிலில் எப்போதும் கடவுளை தரிசிக்க நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதைக் காண முடிகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மஹாலக்ஷ்மியிடம் தங்களது கோரிக்கைகளைச் சொல்லி கடவுளின் ஆசி பெற்று திரும்புகின்றனர்.
எப்படிச் செல்வது :
இந்தியாவின் வணிக நகரமான மும்பை அனைத்து நகரங்களில் இருந்தும் சாலை, ரயில், விமான மார்கமாக இணைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து உள்ளூர் பேருந்து மூலமாக மஹாலக்ஷ்மி கோயிலை எளிதாக அடையலாம்.
மும்பை ரயில் நிலையத்தில் இருந்தோ அல்லது பேருந்து நிறுத்தத்தில் இருந்தோ, விமான நிலையத்தில் இருந்தோ வாடகை வாகனம் மூலமாக மஹாலக்ஷ்மி கோயிலுக்குச் செல்லாம்.