நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வைத்தியநாத சுவாமி!

ஞாயிறு, 15 ஜூன் 2008 (16:26 IST)
webdunia photoWD
நமது நாட்டிலுள்ள சிவபெருமானின் புனிதத் தலங்களில் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றது வைத்தீஸ்வரன் கோயில். இப்புவியில் மனிதனை வாட்டி வதைக்கும் 4,480 நோய்களை தீர்க்கும் வைத்தியநாதராய் இத்திருத்தலத்தில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

இக்கோயிலிற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. இராமாயணத்தில், சீதையை இராவணன் கடத்திச் சென்ற போது ஜடாயு என்ற கழுகு, இராவணின் பல்லக்கை தடுத்து சீதையை காக்க முற்பட்டபோது, இராவணனால் வெட்டப்பட்டு இரு சிறகுகளையும் இழந்து இத்தலத்தில்தான் விழுந்துகிடந்தது. சீதையை தேடி இராமனும், லட்சுமணனும் வந்தபோது, அவர்களிடம் சீதை கடத்தப்பட்டதைத் தெரிவித்துவிட்டு உயிரை விட்ட ஜடாயு இத்தலத்தில் எரிக்கப்பட்ட இடம்தான் ஜடாயு குண்டம் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஜடாயு குண்டத்தில் விபூதி பெற்றுச்செல்வது இன்றும் வழக்கமாக உள்ளது.

இராவணனை போரில் வென்று சீதையை மீட்ட இராமனும், லட்சுமணனும் இக்கோயிற்கு வந்து சிவபெருமானின் அருளைப் பெற்றுச் சென்றாக இத்திருத்தலப் புராணம் கூறுகிறது.

தையல் நாயகி அம்மை!

இத்திருத்தலத்தில் வைத்தியநாதருடன் தையல் நாயகி என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள பார்வதி, பத்மா சூரனை வெல்ல முருகன் புறப்பட்டபோது அவருக்கு சக்திவேல் கொடுத்து ஆசிர்வதித்த்தும் இத்திருத்தலத்தில்தான்.

webdunia photoWD
அங்காரகன் (செவ்வாய்) தொழு நோயால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இத்திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு, மருந்தைப் பெற்று குணமுற்றதால், செவ்வாய்க் கிரகத்திற்குரிய நவகிரகத் தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அங்காரகனுக்கு தனிச் சன்னதி உள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.

webdunia photoWD
திருச்சாந்துருண்டை!

இவ்வளவு சிறப்புக்களைப் பெற்ற இப்புனித தலத்தில்தான், சித்த வைத்தியம் கூறிடும் இப்புவியில் மனிதனை வாட்டும் 4,480 நோய்களையும் குணமாக்கிடும் மருத்துவத்தை சிவபெருமானே தனது சக்தியுடன் வந்து அருளினார் என்று தலப்புராணம் கூறுகிறது. சஞ்சீவி, தயிலம், வில்வ மரத்தின் வேர் மண் ஆகியவற்றின் கூட்டால் தயாரிக்கப்பட்ட மருந்தினையே எல்லா நோய்களுக்கும் தீர்வாக சிவபெருமான் வழங்கியதாக திருத்தலப் புராணம் பகர்கிறது.

வில்வத்தையும், சந்தனத்தையும், விபூதியையும் கலந்தளித்து சிவபெருமான் வழங்கிய மருந்தே எல்லா நோய்களையும் தீர்த்த்தென்றும் கூறப்படுகிறது.

இன்றைக்கும் அப்படிப்பட்ட (எல்லா நோய்களையும் தீர்க்கவல்ல) மருந்தை தயாரிக்கும் முறை இங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. தங்களை பீடித்துள்ள நோயை குணப்படித்திக்கொள்ள இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், சுக்ல பட்ச திதியில் இங்குள்ள அங்கசந்தான தீர்த்தத்தில் நீராடிவிட்டு, அக்குளத்தின் மண்ணை எடுத்துக் கொண்டு கரையேறி, ஜடாயு குண்டத்தில் அளிக்கப்படும் விபூதியைப் பெற்றுக்கொண்டு, தையல் நாயகி அம்மையின் பார்வையிலுள்ள சித்தாமிர்த தீர்த்தத்திற்கு சென்று அந்நீரையெடுத்துக் கொண்டு, முருகனின் சன்னதிக்கு அருகிலுள்ள ஆட்டுக் கல்லில் இட்டு, பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு அரைக்க வேண்டும்.

அது நன்கு கூழானதும் அதனை சிறு சிறு குண்டுகளாக உருட்டி உருவாக்கவேண்டும். இதனை திருச்சாந்துருண்டை என்றழைக்கின்றனர். அதனை கொண்டு சென்று அம்மனுக்கு படைத்து பூசை செய்ய வேண்டும். பூசைக்குப் பிறகு அதனை சித்தாமிர்த தீர்த்தத்துடன் உட்கொள்ள வேண்டும். இந்த திருச்சாந்துருண்டையை எடுத்துக்கொண்டால், இப்பிறவியில் பீடித்துள்ள நோய் மட்டுமின்றி, இனி எடுக்கப்போகும் 5 பிறவிகளுக்கும் எந்த நோயும் அண்டாது என்று கூறப்படுகிறது.

webdunia photoWD
சித்தாமிர்த தீர்த்தம்!

இது மட்டுமின்றி, இத்திருத்தலத்தில் காமதேனுவாக விநாயகப் பெருமான் கற்பக விருட்சத்துடன் எழுந்தருளியுள்ளார். இந்த திருத்தலத்தில் மட்டும்தான் நவக்கிரகங்கள் ஒன்பதும் ஒரே வரிசையில் இருப்பதை பார்க்கலாம். நவக்கிரக தோஷங்கள் அனைத்திற்கும் இத்திருத்தலத்தில் பரிகாரம் செய்து விமோசனம் பெறலாம்.

webdunia photoWD
இக்கோயிலிற்குள் இருக்கும் சித்தாமிர்த தீர்த்தம் (குளம்) மிகுந்த சக்தி வாய்ந்ததாக்க் கூறப்படுகிறது. கிருத யுகத்தில் இத்தலத்திலுள்ள சிவ லிங்கத்தின் மீது காமதேனு பாலைப் பொழிய, அந்தப்பால் வழிந்தோடிச் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் கலந்ததனால் இக்குள நீர் சக்தி வாய்ந்ததாக்க் கருதப்படுகிறது. பகைச் சக்திகளால் பீடிக்கப்பட்டவர்கள் இக்குளத்தில் மூழ்கி எழ, அவற்றின் பிடியிலிருந்து விடுபடுவார்கள் என்கிறது தலப் புராணம்.

இக்குளத்தில் மீன்கள் உண்டு, தவளைகள் ஏதுமில்லை. காரணம் இக்குளத்தில் நீராடி தவம் செய்த முனிவரின் தவத்தை தவளைகள் கலைத்ததால், அவர் இட்ட சாபத்தினால் தவளைகள் ஏதும் இக்குளத்தில் இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.

இத்திருத்தலத்தின் முதற் பெயர் புள்ளிருக்குவேலூர் என்பதே. காரணம், இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானை ஜடாயு (புள்), ,ரிக் வேதம் (இருக்கு), முருகன் (வேல்), சூரியன் (ஊர்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேலூர் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

webdunia photoWD
விசுவாமித்திர்ர், வசிட்டர், திருநாவுக்கரசர், திருஞ்ஞான சம்மந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் இத்திருத்தலம் வந்து சிவபெருமானை வணங்கியுள்ளனர். இத்தனைப் புகழ் வாய்ந்த இத்திருத்தலம் நாடி சோதிடத்தின் மையமாக திகழ்ந்து வருகிறது. கை கட்டை விரல் ரேகையைக் கொண்டு ஒருவரின் இறந்த, நிகழ், எதிர்காலத்தை கூறுகின்றனர்.

எப்படிச் செல்வது:

இரயில் : சென்னையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையம் உள்ளது.

சாலை : சென்னையிலிருந்து 235 கி.மீ. தூரத்திலுள்ள புகழ் பெற்ற சிவத்தலமான சிதம்பரம் சென்று, அங்கிருந்து 26 கி.மீ. பயணம் செய்து இக்கோயிலிற்குச் செல்லலாம்.

விமானம் : அருகிலுள்ள விமான நிலையம் சென்னை, திருச்சி விமான நிலையத்திலிருந்தும் சாலை மார்க்கமாக இத்திருக்கோயிலிற்குச் செல்லலாம்.