கந்த்வாவில் உள்ள பவானி மாதா கோயில்!

இந்த வாரப் புனிதப் பயணத்தில் கந்த்வாவில் உள்ள புகழ்பெற்ற பவானி மாதா கோயிலுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம்.

webdunia photoWD
தூனிவாலே தாதாஜியின் ஆசிரமத்திற்கு அருகே இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் தெய்வம் மாதா துல்ஜா பவானியாகும். ராமர் வாழ்ந்த காலத்தில் இந்த கோயிலில் அவர் 9 நாட்கள் தங்கியிருந்துவிட்டுச் சென்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நவராத்திரியின் 9 நாட்களுக்கும் இங்கு சிறப்பான பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படும். நவராத்திரி தினங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் துல்ஜா பவானி மாதாவை வழிபட்டுச் செல்வார்கள்.

கோயிலின் கர்பக்கிரகம் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாதாவின் கிரீடமும் வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது. ஆதி காலத்தில் பவானி மாதாவை நகதி என்று பக்தர்கள் அழைத்துளள்னர். தாதாஜி தூனிவாலேயின் ஆசிரமம் அமைந்தபிறகு இந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் பவானி மாதா என்று அழைத்துள்ளனர்.

webdunia photoWD
துல்ஜா பவானி மாதாக் கோயில் பார்ப்பதற்கு மிகவும் கலைநயத்துடன் இருக்கும். கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள தூண்கள் சங்கினைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றிலும் இதுபோன்ற அழகான விளக்குத் தூண்கள் காணப்படுகின்றன.

இந்த கோயிலில் பவானி மாதா கர்ப்பகிரகத்தை அடுத்து ஸ்ரீராமர் ச‌ன்னதி, துல்ஜேஷ்வர் ஹனுமன் ச‌ன்னதி, துல்ஜேஷ்வர் மஹாதேவ் ச‌ன்னதி ஆகியவை அமைந்துள்ளன.

இந்த கோயிலில் அமைந்திருக்கும் அனைத்து கடவுள் சிலைகளும் மிகவும் அழகாகக் காட்சி அளிக்கின்றன. அங்கு வாழும் மக்கள் துல்ஜா பவானி அம்மன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். பக்தியோடும், நம்பிக்கையோடும் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் யாவும் நிறைவேறும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

எப்படிச் செல்வது :

கந்த்வா ரயில் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த கோயில் மிக அருகாமையில் அமைந்துள்ளது. தேவி அஹில்யா விமான நிலையத்தில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் கந்த்வா உள்ளது.