தமிழ்நாட்டின் எல்லைக்கருகே, ஆந்திர மாநித்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தென் கயிலாயம் என்றழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தி.
webdunia photo
WD
சிவ பெருமானின் பஞ்ச பூத திருத்தலங்களில் வாயுத்தலம் என்ற சிறப்புப் பெற்றது இப்புண்ணிய திருத்தலம். சுவர்ணமுகி நதிக்கரையில் மூன்று இராஜ கோபுரங்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ காளத்திநாதர் திருக்கோயிலில் வாயு ரூபமாக சிவபெருமான் திகழ்வதால் இத்திருத்தலத்திற்கு தனிப்பெருமையுண்டு.
திருக்கோயில் புராணம்:
இத்திருக்கோயிலில் சிவபெருமான் தன்னை மிகுந்த பக்தியுடன் வணங்கிய மூன்று ஜீவராசிகளையே தனது பெயராக ஏற்றுத் திகழ்கிறார். ஸ்ரீ என்ற பெயர் கொண்ட சிலந்தி, சிவலிங்கத்தின் மீது கூடு கட்டி நிழல் தந்து வழிபட்டு வந்ததெனவும், காலா எனும் பாம்பு, ரத்தினக்கல்லை சிவலிங்கத்தின் மீது வைத்து வழிபட்டு வந்ததாகவும், இவ்வனத்தில் வாழ்ந்த யானை, ஒவ்வொரு நாளும் நீர் கொண்டு வந்து சிவலிங்கத்தை அபிடேகம் செய்து வணங்கி வந்ததாகவும், அவைகளின் பக்தியில் தன்னை மறந்த சிவபெருமான், அவைகளுக்கு மோட்சம் அளித்து தனது உடலில் ஏற்றது மட்டுமின்றி, அவைகளின் பெயராலேயே தான் இத்திருத்தலத்தில் வணங்கப்பட வேண்டும் என்று அருளியதாகவும் இத்திருத்தலப் புராணம் கூறுகிறது.
இத்திருத்தலத்திலுள்ள மூலவருக்கு அருகிலுள்ள விளக்கு எப்பொழும் எரிந்துகொண்டேயிருக்கும். சிவனின் உடலிலேயே பாம்பிற்கு இடமளிக்கப்பட்டுள்ளதால், ராகு - கேது தோஷம் நீங்க இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
webdunia photo
WD
வாயுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து ஓர் இரவு தங்கி, மறுநாள் காலை பூஜைகள் செய்து வழிபட்டால் அப்படிப்பட்ட நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.
இக்கோயிலின் மற்றொரு தனிச்சிறப்பு, பொதுவாக சூரிய, சந்திர கிரகண காலங்களில் எல்லா கோயில்களும் மூடப்படும். ஆனால் இத்திருத்தலத்தில் மட்டும்தான் அப்பொழுது சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
இக்கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள பிரகாரத்தில் வரிசையாக சிவலிங்கள் இருப்பதைக் காணலாம். இவைகள் அனைத்தும் இத்திருத்தலத்திற்கு அருகே தவமிருந்த முனிவர்களும், ரிஷிகளும் பிரதிஷ்டை செய்து வணங்கியவையாகும். எனவே, கருவறையை வலம் வரும்போது, நம்மை பீடித்துள்ள அனைத்து
webdunia photo
WD
தோஷங்களையும் இந்த சிவலிங்கங்கள் ஈர்த்துவிடுவதால், நம்மை வாட்டிவந்த துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு, கருவறையை வலம் வந்து, தென்திசை பார்த்திருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கிவிட்டு, கோயிலின் பின்புறமாகவே வெளியேறுவது இங்குள்ள வழமையாகும்.
இத்திருத்தலத்தில் ஸ்ரீ ஞான பிரசுணாம்பிகையாக உமயவள் வீற்றுள்ளார். மிகச்சக்தி வாய்ந்த இந்த அம்மனை வேண்டி கல்வி, ஞானம் பெறலாம் என்பதும் இத்திருத்தலப் பெருமையாகும். நமது நாட்டிலுள்ள சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
இக்கோயிலை ஒட்டியுள்ள குன்றின் மீதிருந்த சிவலிங்கத்தைத்தான் பக்த கண்ணப்பர் வழிபட்டதாகும். உமிழ்நீரால் சிவலிங்கத்தை அபிடேகம் செய்து, தான் வேட்டையாடிய மிருகத்தின் கறியை நிவேதனம் செய்து வழிபட்ட கண்ணப்பரின் பக்தியை சிவபெருமான் மிகவும் மெச்சி ஏற்றுக்கொண்டார் என்கிறது சிவபுராணம். சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வழிவதைக் கண்டு, தன் கண்ணையே பிடிங்கி இறைவனுக்குப் பொருத்திய கண்ணப்பனின் பக்தியை கண்டு முனிவர்களும், ரிஷிகளும் அதிர்ச்சியுற்றதாகவும், கண்ணப்பனின் பக்தியை அவர்களுக்கு உணர்ந்த சிவன் நடத்திய திருவிளையாடலே அதுவென்று சிவபுராணம் கூறுகிறது.
இத்திருக்கோயிலை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் சுவர்ணமுகி நதி, வடக்கு நோக்கி ஓடி இத்தலத்தைத் தொட்டு, பிறகு கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கிறது. இந்நதியில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது.
webdunia photo
WD
இத்திருக்கோயிலில் உள்ள பாதாள விநாயகர்தான், அகத்தியரின் வேண்டுதலை ஏற்று சுவர்ணமுகி ந்தியை கொண்டுவந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
எப்படிச் செல்வது;
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் காளஹஸ்தி அமைந்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர அரசுப் பேருந்துகள் அதிக அளவிற்கு இயக்கப்படுகின்றன.
இரயில் மார்கம்: சென்னை திருப்பதி செல்லும் இரயிலில் சென்று குண்டக்கல்லில் இறங்கி அங்கிருந்து காளஹஸ்திக்கு பேருந்து அல்லது மற்ற வாகனத்தில் செல்லலாம்.