நமது நாட்டின் புண்ணிய நதியான கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள வாரணாசி உலகிலேயே மிகப் பழமையான நகரம் என்பது மட்டுமன்றி இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் திகழ்கின்றது. ஜோதிர்லிங்கம், விஸ்வேஸ்வரா அல்லது விஸ்வநாதா என்றழைக்கப்படும் சிவபெருமான் எழுந்தருளியுள்ள புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோவில் இந்நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவின் ஆன்மீக வரலாற்றில் ஒரு சிறப்பு வாய்ந்த தனித்துவமிக்க இடம் விஸ்வேஸ்வரா ஜோதிர்லிங்கத்திற்கு உண்டு. ஹிந்து மத நம்பிக்கைகளின்படி ஒருமுறை இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு கங்கை நதியில் நீராடினால், அது எந்தச் சாதியைச் சேர்ந்தவராயினும், ஆண், பெண், இளைஞர், முதியோர், தூய்மையானவர், அசுத்தமானவர் என யாராக இருந்தாலும் அவர் மோட்சத்திற்குச் செல்லும் பாதையில் இடப்படுவார். இதனால், பாரத பூமியில் வாழ்ந்துவரும் மக்களனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல விரும்பும் புனிதத் தலமாக காசி உள்ளது. இக்கோவிலுக்கு யாத்திரை வருபவர்கள் தங்கள் ஆசைகளில் ஒன்றையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்பதும் மரபாகும். ஞானத்தின் மையம்... பூமி தோன்றியபோது விழுந்த முதல் ஒளிக்கதிர் காசியின் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதிருந்து காசி ஞானம், ஆன்மீகத்தின் மையமாகத் திகழ்கிறது. பல காலங்களுக்குப் பிறகு சிவன் வாரணாசிக்கு வந்து காசியில் நிரந்தரமாகத் தங்கியதாகவும், சிவபெருமானை வரவேற்க பிரம்மா 10 குதிரைகள் பூட்டிய ரதத்தை அனுப்பியதாகவும் புராணங்கள் கூறுகின்றன.கோயில் அமைவிடம்...
கங்கை நதியின் அருகில் விஸ்வநாத கல்லி என்றழைக்கப்படும் சிறிய வீதியில் சிறுசிறு கோயில் தொடர்கள் கொண்ட வளாகம் அமைந்துள்ளது. ஏராளமான துணைக் கோயில்கள் சூழ்ந்திருக்க அதனுள் மையமாக திகழும் கோயிலில் விஸ்வநாதர் குடி கொண்டுள்ளார். அங்கு ஞான வாபி என்றோரு கிணறு உள்ளது. ஞானக் கிணறு என்றழைக்கப்படும் இந்தக் கிணறு கோயிலின் வடக்கில் உள்ளது.
விஸ்வநாதர் கோயிலில் கருவறையும் மைய மண்டபமும் உள்ளது. கருவறைக்குள் 60 செ.மீ. உயரமும் 90 செ.மீ. சுற்றளவும் கொண்ட வெள்ளி அரணிற்குள் கருங்கல்லினால் ஆன சிவலிங்கம் உள்ளது. வழிபாட்டிற்கு ஏற்றவாறு அமைதியான சூழலை உருவாக்கும் வகையில் கோயிலின் உட்புறம் சிறியதாக அதிக விசாலமின்றி உள்ளது.
வரலாறு...
காசி விஸ்வநாதர் கோயில் வரலாற்றுக்கு முற்பட்டது என்று கூறப்படுகிறது. 1776 ஆம் ஆண்டு இந்தூரை ஆண்ட மகாராணி அகல்யாபாய், விஸ்வநாதர் கோவில் கட்டுமானங்களை புதுப்பிப்பதற்காக பெருமளவில் நன்கொடை வழங்கினார். 16 மீட்டர் உயரமுடைய கோபுரத்திற்குக் கவசம் செய்வதற்காக லாகூர் மகாராஜா ரஞ்சித் சிங் 1,000 கிலோ தங்கத்தை வழங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. இறுதியில் கடந்த 1983 ஆண்டு இக்கோயிலின் நிர்வாகத்தை உத்தரப்பிரதேச அரசு ஏற்றுக் கொண்டதோடு, பனாரஸ் நகரத்தின் முன்னாள் அரசரான விபூதி சிங்கை அறக்கட்டளைத் தலைவராக நியமித்தது. பூஜைகள்...
தினமும் அதிகாலை 2.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3 முதல் 4 மணி வரை நடக்கும் மங்கள ஆரத்தியை தரிசிக்க நுழைவுச் சீட்டுப் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். 4 மணியில் இருந்து 11 மணி வரை பொது தரிசனம் அனுமதிக்கப்படும். 11.30 முதல் 12 மணி வரை நண்பகல் போக ஆரத்தி நடக்கும்.
மீண்டும் 12 மணி முதல் மாலை 7 மணி வரை இலவச தரிசனம் நடக்கும். 7 மணி முதல் 8.30 மணி வரை சப்த ரிஷி ஆரத்தி நடக்கும். பிறகு 9 மணிக்கு போக ஆரத்தி துவங்கும் வரை தரிசனத்திற்கு அனுமதி உண்டு. அதன் பிறகு நடைக்கு வெளியில் இருந்து மட்டுமே கடவுளை தரிசிக்க முடியும். இரவு 10.30 மணிக்கு சயன ஆரத்தி துவங்கும். இறுதியாக 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வழங்கும் பால், துணிமணிகள், மற்ற வேண்டுதல் பொருட்கள், பிரசாதங்கள் என அனைத்தும் ஏழைகளுக்கு தானமான வழங்கப்படும். காசிக்குச் செல்வது எப்படி?வான் வழியாக... இந்தியாவின் முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்களுடன் வாரணாசி நன்கு இணைக்கப்பட்டு உள்ளது. வாரணாசியில் இருந்து இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு நாள்தோறும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து உள்ளது. குறிப்பாக டெல்லி- ஆக்ரா- கஜூராஹோ- வாரணாசி பாதை சுற்றுலா பயணிகளிடம் பிரபலமானதாகும். இரயில் வழியாக...வாரணாசியில் இருந்து டெல்லி, கொல்கட்டா, மும்பை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து உள்ளது. வாரணாசியில் வாரணாசி சந்திப்பு, காசி சந்திப்பு ஆகிய இரண்டு முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. டெல்லியில் இருந்தும் கொல்கட்டாவில் இருந்தும் ராஜ்தானி விரைவு ரயில்கள் வாரணாசிக்கு வருகின்றன. வாரணாசியில் இருந்து 10 கி.மீ. தெற்கில் உள்ள முகல்சராய் நகரில் இருந்தும் ரயில் ஏற முடியும். சாலை வழியாக...
உத்தரப் பிரதேசத்தின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் அரசு, தனியார் பேருந்துப் போக்குவரத்து தொடர்ச்சியாக வாரணாசிக்குச் சென்று வருகின்றன. வாரணாசி எல்லா வகையான சாலைப் போக்குவரத்து வசதிகளையும் கொண்டுள்ளது.