இத்திருத்தலத்தின் பலி பீடம் போர்த்துக்கீசிய கட்டிடக் கலை முறைப்படி வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த பீடத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னையின் திருவுருவம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரான்சில் இருந்து கொண்டுவரப்பட்டது.வரலாற்று சிறப்பு மிக்க செருதலை முட்டம் புனித மேரி பெஃரோனா திருத்தலம் 900 ஆண்டு வரலாற்றை கொண்டது. செருதலா ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு வணிக நகரமாக விளங்கியுள்ளது. ஆரம்ப காலங்களில் யூதர்கள் இங்கு வந்து வணிகம் செய்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் இப்பகுதிக்கு வந்தபோது கொக்கமங்கலம் என்ற இடத்தில் தங்கி இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. அவர் கேரள மாநிலத்தில் உருவாக்கிய ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இத்திருத்தலம் கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் அதிக செல்வாக்குடன் வளர்ச்சி அடைந்த காலத்தில் செருதலாவை அடுத்த முட்டத்தில் ஒரு புதிய ஆலயத்தை கடந்த 1023ஆம் ஆண்டு கட்டியுள்ளனர். அத்திருத்தலத்தில் பரிசுத்த தேவமாதாவின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.கன்னிமரியானின் பரிசுத்தத்தை போற்றும் நாளாக ஆண்டு தோறும் டிசம்பர் 8ஆம் தேதி விழா கொண்டாடப்படுகிறது. இதனை கடந்த 1476 ஆண்டு போப்பாண்டவர் 6ஆம் சிக்ஸ்டர்ஸ் தொடங்கி வைத்துள்ளார். இது காலம் காலமாக தொடர்ந்து கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஆண்டிற்கு இரண்டு விழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் திருவிழா டிசம்பர் மாதம் 8ஆம் தேதிக்கு பின்னர் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையும், ஜனவரி மாதம் 21ஆம் தேதி அன்னையின் திருமண நாளும் கொண்டாடப்படுகிறது. அன்னையின் திருமண நாள் விழா உலகிலேயே முட்டம் திருத்தலத்தில் மட்டும் கொண்டாடப்படுவது இத்திருத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். இந்த இரு விழாக்களின் போது அன்னை மற்றும் குழந்தை இயேசுவை திருவுருவங்கள் பவனியாக எடுத்து வரப்படுகின்றன.
இத்திருத்தலத்தின் பீடம் புதுப்பிக்கப்பட்டு பெரிய திருத்தலமாக கடந்த 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வடிவமைப்பு போர்த்துக்கீசிய கட்டிடக்கலையை எதிர்ரொலிப்பதாக அமைந்துள்ளது. புனித பிரான்சிஸ் சவேரியார் கோவாவிற்கும் கேரளாவிற்கும் வந்தபோது இத்திருத்தலத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சவேரியார் இறந்து குழந்தை ஒன்றுக்கு உயிர் கொடுத்ததாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த திருத்தலத்தின் தெற்கு மூளையில் ஒரு சிலுவை அமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் எர்ணாகுளம்-அங்கமாலி உயர் மறைமாவட்டம் இத்திருத்தலத்தை மரியாளின் திருத்தலமாக அறிவித்துள்ளது. கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து மரியாளின் பக்தர்கள் அன்னை தங்களுக்கு செய்த கொடைகளுக்கு நன்றி தெரிவித்து இத்திருத்தலத்திற்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
புனித மரியாள் என்பது மனித குலத்தின் பாதுகாவளி என்று பொருள். மரியாளின் அன்பு, அருள், ஆசீர்வாதத்தை பெறுவதற்காக மதம், இனம், மொழிகளை கடந்து ஏராளமானோர் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர். பரிசுத்தமான புனித வாழ்க்கை, ஆசீர்வாதத்தையும், அவளுடைய ஆதரவையும் பெற இந்த புனித மரியாளின் முன்பு முழந்தாள் இடுவோமா?