பவாகாத் சக்தி பீடம்!

Webdunia

ஞாயிறு, 9 டிசம்பர் 2007 (16:38 IST)
webdunia photoWD
குஜராத் மாநிலத்தின் பண்டையத் தலைநகரான சம்பானீர் எனும் இடத்திலுள்ள பவாகாத் சக்தி பீடம், நமது நாட்டிலுள்ள புகழ்மிக்க சக்தித் தலங்களில் ஒன்றாகும்!

குஜராத் மாநிலத்தில் உள்ள சக்தி பீடங்கள் மூன்று. அரசூர் அருகிலுள்ள அம்பாஜி, சுன்வாலில் உள்ள பாலா, சம்பானீர் அருகிலுள்ள பவாகாத் மகா காளி ஆகியன அம்மூன்று சக்தி பீடங்கள் ஆகும். இவைகள் தவிர, கட்ச்சிலுள்ள அசாபுரா, அபு மலையிலுள்ள அற்புத தேவி, ஹல்வாத்திலுள்ள சுந்தரி, கொய்லா அல்லது கோல்கிரியிலுள்ள ஹர்சித்தி, நர்மதை நதிக் கரையிலுள்ள அனுசூயா ஆகியன இம்மாநிலத்திலுள்ள மற்ற சக்தித் தலங்களாகும்.

பவாகாத் சக்தி பீடம் வதோத்ராவில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. தக்க்ஷணின் யாகத்தை சிதைத்த சிவபெருமான் கோபம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடியபோது, அவரின் சரிபாதி அங்கமாயிருந்த சக்தியின் உடல் பிரிந்து சிதறி பாரத நாட்டின் பல இடங்களில் விழுந்தது. அப்படி சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடமெல்லாம் சக்தி பீடங்களாக வழிபடப்படுகிறது. சக்தியின் இடது மார்பகம் பவாகாத்தில் விழுந்ததெனவும், அதுவே இன்றளவும் குறிப்பிடத்தக்க சக்தி பீடங்களில் ஒன்றாக வழிபடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின்போது இத்திருத்தலத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள ஒரு மலையின் பெயரை இங்கு குடிகொண்டுள்ள சக்தியின் தலப்பெயராக உள்ளது.

சம்பானீரிலிருந்து மலைப்பகுதிகளின் இடையே செல்லும் பாதையில் சென்று பவாகாத்தை அடையவேண்டும். இங்குள்ள மகா காளியின் கோயிலில் காளிகா மாதாவின் சன்னதியும் உள்ளது. மகா காளியின் உருவமும், பஹூசரா சக்தியின் யந்திரமும் இங்குள்ளது.

webdunia photoWD
பவாகாத் மலைப்பகுதியெங்கும் விஸ்வாமித்திரரின் சக்தி பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தலத்திலுள்ள காளிகா மாதாவின் திருவுருவத்தை படைத்ததும் விஸ்வாமித்திரரே என்றும் கூறப்படுகிறது. விஸ்வாமித்திரி என்ற பெயருடைய நதி இங்குதான் உற்பத்தியாகிறது.
இத்திருத்தலத்திலுள்ள காளியை தக்ஷிண காளி என்றே அழைக்கின்றனர். தக்ஷிண மார்கமெனும் வேத, தாந்திரிக முறையிலேயே வழிபாடுகள் செய்யப்படுகின்றன.நவராத்திரி பண்டிகைகளின்போது பற்பல பூஜைகள் செய்யப்படுகின்றன.

webdunia photoWD
சம்பானீர் மலையின் மீதுள்ள கோட்டை, பல போர்களின் வடுக்களுடன் காணப்படுகிறது. 11வது நூற்றாண்டிற்குப் பிறகு ராஜபுதன அரசர்களின் ஆளுமைக்குட்பட்டிருந்த இக்கோட்டை, 15வது நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் குஜராத் சுல்தான்களின் கைகளுக்குச் சென்றது. அதன் பிறகு முகலாயப் பேரரசரான ஹூமாயூன் கைப்பற்ற, பிறகு அதனை சுல்தான் பகதூர் ஷா கைப்பற்றினார். பேரரசர் அக்பரின் கட்டுப்பாட்டிற்கு வந்த இக்கோட்டை, பிறகு மராட்டிய அரசர்களின் ஆளுமைக்குச் சென்று கடைசியில் பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது.

சம்பானீரிலிருந்து பவாகாத் செல்ல மூன்று கட்டமாக பயணம் செல்ல வேண்டும். பவாகாத் பீடபூமி 1,471 அடி உயரத்திலுள்ளது. இதன் பெயர் மாச்சி ஹவேலி. இவ்விடம் வரை மாநில அரசின் பேருந்து சேவை உள்ளது. இங்கு தங்கும் விடுதிகளும் உள்ளன. மாச்சி ஹவேலி பீடபூமி மீது டேலியா டலாவ், துதியா டலாவ் எனும் இரண்டு ஏரிகள் உள்ளன.

webdunia photoWD
இந்த பீடபூமியின் மீதுள்ள குன்றின் மேல்தான் மகா காளியின் கோயில் உள்ளது. மாச்சியிலிருந்து மகா காளியின் கோயிலிற்குச் செல்ல 250 நடை படிகள் உள்ளன. இழுவை இரயில் சேவையும் உள்ளது. இக்கோயிலிற்கு அருகே பீர் ஆதன் ஷா என்ற முகமதிய ஞானியின் தர்காவும் உள்ளது. இங்கு இஸ்லாமியர்கள் வந்து வழிபடுகின்றனர்.

எப்படிச் செல்வது :

வான் வழி : அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து பவாகாத் 190 கி.மீ. தூரத்திலுள்ளது.

இரயில் வழி : வதோத்ரா இரயில் நிலையத்திலிருந்து 50 கி.மீ. தூரத்திலுள்ளது.
சாலை வழி : வதோத்ராவிலிருந்து மாநில அரசு பேருந்துகளும், தனியார் சொகுசு பேருந்துகளும் பவாகாத் வரை செல்கின்றன.