இந்தியாவின் புகழ்பெற்ற 12 சக்தித் தலங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பா பவானி திருக்கோயிலாகும். மிகப் பழமைவாய்ந்த இத்திருக்கோயிலின் கருவறையில் இறையின் திருவுருவச் சிலை ஏதுமில்லை. ஆனால், அந்த பீடம் மட்டுமே இருக்கும். அந்தப் பீடத்தின் மீது அம்பா பவானி உடையும், ஆபரணங்களும் அவர் இருப்பதைப் போலவே வைக்கப்பட்டு ஆராதனை நடத்தப்பட்டு அதுவே அம்பாவின் காட்சியாக தரிசிக்கப்படுகிறது.
இக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் ஜெய அம்பே என்று உச்சரித்து அம்பாஜியை வணங்குகின்றனர். அம்பா பவானியை வழிபட்டுத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை ருக்மணி தனது கணவராய் பெற்றார். பகவான் கிருஷ்ணனுக்கு இத்திருத்தலத்தில்தான் மொட்டை போடும் விழா ஒன்றும் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெளணர்மி தினத்தன்றும் இத்திருக்கோயில் அமைந்துள்ள அம்பாஜி நகரில் லோக் மேலோ எனும் விழா கொண்டாடப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து அம்பா பவானியை வணங்கிச் செல்கின்றனர்.
பேரரசர்களும், பெரும் ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் அம்பா பவானியின் பாதங்களுக்கு ஈர்க்கப்பட்ட புண்ணிய சேத்திரம் இது.
நமது நாட்டில் உள்ள 51 சக்தி பீட தீர்த்தங்களில் அம்பாஜியும் ஒன்று. இறைவனின் பிரபஞ்ச சக்தி இறங்கிய மிக முக்கிய 12 தலங்களிலும் ஒன்றாக இத்திருத்தலம் திகழ்கிறது. உஜ்ஜைனில் உள்ள பகவதி மகாகாளி மகாசக்தி, காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், மலாய் கிரியில் உள்ள பிரம்ம ரம்பா, கன்னியாகுமரியில் உள்ள குமரி அம்மன், குஜராத்தில் அம்பாஜி, கோலாப்பூரில் மகாலட்சுமி, பிராகையில் உள்ள தேவி லலிதா, விந்தியாவில் உள்ள விந்தியா வாஷினி, வாரணாசியில் (காசி) உள்ள விசாலாட்சி அம்மன், கயாவில் உள்ள மங்களாவதி, வங்கத்தில் உள்ள சுந்தரி பவானி, நேபாளத்தில் உள்ள குயா கேசரி ஆகியன புகழ்பெற்ற 12 சக்தி பீடங்களாகும்.
webdunia photo
WD
குஜராத், ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள அம்பாஜி நகரம் பிரசித்தி பெற்ற ஆபு மலைப் பகுதியில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும், பலாங்பூரில் இருந்து 65 கி.மீ. தூரத்திலும் உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களை தன்னகத்தே ஈர்க்கும் இத்திருக்கோயிலின் தெய்வமான அம்பாஜி மாதா, அம்பாஜி நகரில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள கப்பார் எனும் குன்றின் உச்சியில் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
இத்திருக்கோயில் மிகத் தொன்மையானது. எவ்வளவு காலத்திற்கு முன்பு அது கட்டப்பட்டது என்ற எந்தச் சரித்திரமும் இல்லை. ஆரியர்களின் வருகைக்கு முன்னரே அம்பா இருந்ததாகவும், ஆரியர்கள் தங்களுடைய தெய்வங்களில் ஒன்றாக அம்பா பவானியைச் சேர்த்துக் கொண்டதாகவும் நம்பப்படுகிறது. கப்பார் குன்றின் படிக்கட்டுகளில் அம்பா அம்மையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குதான் முதன் முதலில் கிருஷ்ணனுக்காக மொட்டை போடும் விழா துவங்கியதாகக் கூறப்படுகிறது.
webdunia photo
WD
இதேபோல, ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அரசூர் எனும் குன்றின் மீது அம்பாஜி திருக்கோயில் உள்ளது. அங்கும் எந்த விக்ரகமும் இல்லை. அங்கு தங்கத்தினாலான எந்திரம் செதுக்கப்பட்டுள்ளது. அதில் 51 மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்பாஜி மாதாவை வந்து வணங்குகின்றனர். அம்பாஜி மாதா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தனது பக்தர்களின் எண்ணங்களை ஈடேற்றி வருவதாக அம்மக்கள் கூறுகின்றனர்.
நவராத்திரி :
நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் 9 நாட்களும் இத்திருக்கோயிலில் நடனமும், மற்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. குஜராத்தின் பல பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் இத்திருத்தலத்திற்கு தங்கள் குடும்பத்தினருடன் வருவார்கள். இவ்விழாவையொட்டி அங்கு கண்காட்சியும் நடைபெறுகிறது. அம்பையை வழிபட 700 வரிகளைக் கொண்ட சப்தஸ்ததி என்ற பாடல் படிக்கப்படும். பத்ரபதி பெளர்ணமி அன்று இத்திருக்கோயிலிற்கு வரும் பக்தர்கள் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கப்பார்கத் என்ற இடத்திற்குச் செல்கின்றனர். அங்குள்ள குன்றின் மீது அரச மரம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி வலம் வந்து திரும்பிச் செல்கின்றனர். குஜராத்தி முறைப்படி வண்ணங்களாலும், மலர்களாலும் அலங்கரிப்பும், வழிபாடும் நடைபெறும்.
webdunia photo
WD
அமாவாசை, பெளர்ணமி தினங்களிலும், அஷ்டமி தினத்திலும் அம்பாஜிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு கணமும் புண்ணியமானதுதான். வார்த்தைகளால் அவைகளை கேட்பதை விட, நேரில் வந்து அனுபவிப்பது சிறப்பான அனுபவமாகும்.
அம்பாஜிக்கு எப்படிச் செல்வது :
சாலை மார்க்கமாக : அகமதாபாத்தில் இருந்து 180 கி.மீ., ஆபு ரோடு ரயில் நிலையில் இருந்து 20 கி.மீ., ஆபு மலையில் இருந்து 45 கி.மீ., டெல்லியில் இருந்து 700 கி.மீ..