நமது புனிதப் பயணத்தில் இந்த வாரம் நாம் செல்லும் புனிதத் தலம் மங்கள்நாத் கோயில்!
webdunia photo
WD
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆன்மீகத் தலைநகர் என்றழைக்கப்படும் உஜ்ஜைனில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, செவ்வாய் கிரகத்தின் தாய் உஜ்ஜைன். தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாயின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள் மற்ற சாதகமற்ற கிரகங்களை இங்கு வழிபட்டு அமைதிபடுத்த வருகின்றனர். நமது நாட்டில் புதனிற்காக பல கோயில்கள் இருந்தாலும், உஜ்ஜைன் அவருடைய பிறந்த இடம் என்பதால் இங்கு அவரை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்தக் கோயில் பல நூற்றாண்டுக்கால பழமை வாய்ந்தது. சிந்தியா அரச குடும்பம் இக்கோயிலை புதுப்பித்தது. மகாகாளீஸ்வரரின் நகரம் என்றும் உஜ்ஜைன் அழைக்கப்படுகிறது. எனவே இங்கு செவ்வாயும் சிவனின் உருவத்திலேயே வழிபடப்படுகிறார். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர்.
அந்தகாசூரனின் வதமும் - செவ்வாய் பிறப்பும்!
செவ்வாய் கிரகம் பிறந்த கதை இதுதான். அந்தகாசூரன் எனும் அசுரன் சிவனிடம் வரத்தைப் பெற்றான். அவனுடைய ரத்தத் துளிகள் கீழே விழுந்தால் ஒவ்வொன்றும் ஒரு அசுரனாக ஆகும் என்பது அவன் பெற்ற வரமாகும். மரணமற்ற இந்த வரத்தைப் பெற்ற அந்தகாசூரன், அவந்திகா நகரை நாசம் செய்யத் துவங்கினான். அவனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை காப்பாற்றுமாறு சிவனை வேண்டினர். அவர்களைக் காப்பாற்ற சிவனே அந்தாசூரனுடன் போராடினார். கடுமையான யுத்தம் நடந்தது. போரில் சிவனிற்கு வேர்வை பெருக்கெடுத்தது.
webdunia photo
WD
ருத்ரனின் வெப்பமான வேர்வைத் துளிகள் தரையில் விழுந்ததும் உஜ்ஜைன் இரண்டாகப் பிளந்தது. அப்பொழுது செவ்வாய் கிரகம் பிறந்தது. அந்தகாசூரனை சிவன் கொன்றார். அப்பொழுது அந்தகாசூரனிடம் இருந்து வெளியேறிய ரத்தத்தை புதன் கிரகம் தன்னுள் கிரகித்துக் கொண்டது. இதனால்தான் செவ்வாய் கிரகம் சிவந்தே காணப்படுவதாகக் கூறப்படுகிறது என்று ஸ்கந்த புராணத்தில் அவந்திகா கண்டம் பகர்கிறது.
மங்கள் ஆரத்தி!
இத்திருக்கோயிலில் காலை 6 மணிக்கு செவ்வாய் கிரகத்திற்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. அந்த ஆராதனை முடிந்தவுடன் இத்திருக்கோயிலிற்குள் ஏராளமான கிளிகள் வருகின்றன. கோயிலின் பிரசாதம் தரப்படும் வரை அங்கேயே இருக்கின்றன. உரிய நேரத்தில் தங்களுக்கு பிரசாதம் அளிக்கப்படவில்லையெனில் அவைகள் கத்தத் துவங்கிவிடும் என்று கோயில் பூசாரி நிரஞ்சன் பாரதி கூறுகிறார்.
webdunia photo
WD
இக்கோயிலில் அளிக்கப்படும் பிரசாதத்தைப் பெறுவதற்கு செவ்வாய் கடவுளே கிளிகள் வடிவத்தில் வருவதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். மேஷம், விருட்சிக ராசிகளின் கடவுள் புதன். தங்களுடைய ஜாதகத்தில் 4வது, 7வது, 12வது இடத்தில் செவ்வாயை கொண்டிருப்போர் அவரை சாந்தப்படுத்த இக்கோயிலிற்கு வந்து வழிபாடு செய்கின்றனர். மார்ச் மாதத்தில் அங்காரக சதுர்த்தியில் மங்கள்நாதருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. அந்த குறிப்பிட்ட நாளில் சிறப்பு யாகமும் செய்யப்படுகிறது. செவ்வாயை சாந்தப்படுத்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இதற்காக உஜ்ஜைனிற்கு வருகின்றனர்.
செவ்வாயின் கோபத்தை தணிக்க மங்கள்நாத் கோயிலிற்கு வந்து வழிபட வேண்டும் என்று புராணங்கள் கூறுகின்றன. தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆயிரக்கணக்கில் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.
webdunia photo
WD
இங்கு செவ்வாய்க்கிழமை வந்து வழிபடுவதும், அங்காரக சதுர்த்தியில் வந்து வழிபடுவதும் சிறப்பானதாகும். ஆனால், நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திருத்தலத்திற்கு வரலாம். செவ்வாய்க்கிழமை மட்டும் சிறப்புப் பூஜைகள் உண்டு.
எப்படிச் செல்வது?
சாலை மார்க்கமாக : இந்தோரில் இருந்து 55 கி.மீ., போபாலில் இருந்து 175 கி.மீ., கண்டுவாவில் இருந்து 185 கி.மீ., ரட்லமில் இருந்து 90 கி.மீ. - பேருந்து அல்லது கார் மூலமாகச் செல்லலாம்.
ரயில் மார்க்கமாக : மும்பை, டெல்லி, இந்தோர், போபால், கண்டுவா ஆகிய இடங்களில் இருந்து உஜ்ஜைனிற்கு நேராக ரயிலில் செல்லாம்.
விமான மார்க்கமாக : இந்தோர் விமான நிலையத்தில் இருந்து 65 கி.மீ.
எங்கே தங்கலாம்?
ஏராளமான விடுதிகள் உள்ளன. தர்மசாலாவும் உள்ளது. மஹாகாள் தர்மசாலா கமிட்டி, ஹர்ஷித் கமிட்டி ஆகியவற்றில் சாதாரண கட்டணத்திலும், அதிகக் கட்டணத்திலும் வசதியான தங்கும் இடங்களும் உள்ளன.