இறைவனு‌க்கு 16 ப‌ணி‌விடைக‌ள்

புதன், 22 ஏப்ரல் 2009 (11:58 IST)
திருமணமுடித்தவர்களை வாழ்த்தும் போது பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவோம்.

அதாவது கல்வி, மகிழ்ச்சி, செல்வம் உள்ளிட்ட பதினாறு செல்வங்களைப் பெற்று வாழ்க என்பது அதன் பொருள்.

அது போல இறைவனை உபசரிப்பதிலும் 16 பணிவிடைகள் உள்ளன.

அதாவது வீட்டிற்கு வரும் இறைவனை விருந்தினரைப் போல பாவித்து எவ்வாறு எல்லாம் உபசரிப்பது என்பதுதான் இந்த 16 பணிவிடை.

முதலில் இறைவனை வரவேற்று அமருவதற்கு ஆசனம் அளிக்க வேண்டும்.

அவரது கால்களை கழுவ நீர் தர வேண்டும். அதனை பாத்யம் என்பர்.

கை கழுவ நீர் அளிப்பதை அர்க்யம் என்பார்கள்.

தூய்மை அடைந்ததும் குடிப்பதற்கு நீர் வழங்க வேண்டும். இதனை ஆசமநீயம் என்பார்கள்.

உடலை தூய்மைப்படுத்த அபிஷேகம் செய்வார்கள். அதாவது திருமுழுக்கு.

அணிந்து கொள்ள ஆடைகள் அளிக்க வேண்டும். உடலை நறுமணத்துடன் வைக்க நறுமணப் பொருட்கள் அளிக்க வேண்டும்.

மலர் மாலைகளைச் சூட்டி அழகூட்ட வேண்டும்.

அவர்களைச் சுற்றி நறுமணம் வீச நறுமணப் பொருட்களை புகையிடுதல் வேண்டும். அதாவது ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை தூபம் போடுதல்.

இறைவன் அருகில் ஒளி விளக்குகளை ஏற்றி அவரை மும்முறை சுற்றி வருதல் அல்லது வலம் வருதல்.

அவர் வாயிறாற உண்ண நைவேத்யம் செய்தல், உணவுப் பொருட்களைப் படைத்தல்.

கற்பூரம் கொளுத்திக் காட்டி இறைவனை வணங்குதல்.

இறைவனை சுற்றி எவ்வித தொல்லையும் இல்லாத வண்ணம் சாமரம் வீசி விட வேண்டும்.

காற்று வர விசிறி கொண்டு வீசுதலும் செய்தல் நலம்.

இறைவனுக்கு குடை கவித்தல் வேண்டும். இதனை சத்ரம் என்பார்கள்.

அவருக்கு கண்ணாடி காட்டி தான் இருக்கும் கோலத்தை காண்பிப்பது தர்ப்பணம் என்பார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்