அதிசயங்கள் அதிகம் கொண்டது நமது பாரத நாடு. தனது காதல் மனைவிக்காக முகலாயப் பேரரசர் ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால், மகாபலிபுரத்திலுள்ள கடலோரக் கோயில்கள், சிற்பங்கள், குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயம், பூரி ஜெகந்நாதர் கோயில், கொனார்க், எல்லோரோ சிற்பங்கள், அஜந்தா ஓவியங்கள் ஆகியன நமது நாட்டின் உயரிய பாரம்பரியத்திற்கும், ஈடிணையற்ற உருவாக்கத் திறனிற்கும் அத்தாட்சியாக திகழ்கின்றன.
webdunia photo
WD
அப்படிப்பட்ட அதிசயங்களில் ஒன்றுதான் தஞ்சையிலுள்ள பெருவுடையார் கோயில் என்றழைக்கப்படும் பெரிய கோயிலாகும். சோழப் பேரரசர் இராஜராஜனால் ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரம்மாண்டமான இத்திருக்கோயில் ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் அற்புதமாகும்.
சீரிய சிவ பக்தராகயிருந்த பேரரசர் இராஜராஜன், இந்த மாபெரும் திருக்கோயிலை 1003ஆம் ஆண்டு கட்டத் துவங்கி 1009ஆம் ஆண்டு முடித்துள்ளார். பெருவுடையார் எனும் பெயரில் இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை வணங்கிய இராஜராஜன், இக்கோயிலின் கருவறையின் மீது கட்டிய மிகப்பெரிய விமானமே இக்கோயிலின் பெரும் சிறப்பாக போற்றப்படுகிறது.
இராஜகோபுரமும், விமானமும்!
தென்னகக் கோயில்களில் நுழைவாயிலின் மீது கட்டப்பட்டுள்ள இராஜகோபுரமே பெரிதாக இருக்கும். கோயிலின் கருவறையின் மீது கட்டப்பட்டுள்ள விமானம் சிறியதாக,
webdunia photo
WD
ஒரு கலசத்தை உச்சியில் தாங்கியதாக இருக்கும். இராஜகோபுரத்தின் மேல் 5 முதல் 11 வரை கும்பக் கலசங்கள் இருக்கும். இப்படிப்பட்ட இராஜகோபுர கட்டுமானத்திற்கு காரணம், கோயிலிற்கு வந்து வணங்கும் வாய்ப்பு பெறாத பக்தர்கள் தூரத்திலிருந்தே - இராஜகோபுரத்தின் மேலுள்ள கலசங்களைப் பார்த்து வணங்கினால் அது அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வத்தை வணங்கியதாக ஆகும் என்பது ஆன்மீக விளக்கமாகும்.
ஆனால் தஞ்சை பெரிய கோயிலைப் பெருத்தவரை நுழைவாயிலில் உள்ள இரண்டு கோபுரங்களும் ஆன்மீக, கலை வளமிக்கதாக இருந்தாலும் உயரத்தில் சிறியதாகவே உள்ளன. மாறாக, கோயிலின் கருவறையின் மீது
webdunia photo
WD
கட்டப்பட்டுள்ள விமானம் - ஒரே ஒரு கலசத்தை தாங்கி - மிகப் பெரியதாக உள்ளது. தரையிலிருந்து 216 அடி உயரமுடைய விமானத்தின் மீது 12 அடி உயரமுடைய கும்பக் கலசம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான விமானம் இதுவேயாகும்.
ஆனால் இக்கோயிலின் அதிசயம் இநத விமானத்தின் உயரமல்ல, மாறாக அதனைக் கட்ட கடைபிடிக்கப்பட்ட கட்டடக் கலையில் உள்ளது. இவ்வளவு பெரிய கட்டுமானம் அடித்தளமின்றி எழுப்பப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அடித்தளமின்றி இக்கோயில் விமானம் 1,000 ஆண்டுகளாக நின்றுகொண்டிருக்கிறது என்றால் அந்த அற்புதத்தை என்னவென்று சொல்வது?
ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கற்றிருந்த கட்டடக் கலை இதுதான்: இக்கோயிலிற்குள் நுழைந்து கருவறையில் உள்ள 12 அடி சிவலிங்கத்தை நாம் வணங்குகின்றோம். அந்த சிவலிங்கத்தை சுற்றிக் கட்டப்பட்டுள்ள கருவறைச் சுவரைச் சுற்றி, 6 அடி இடைவெளி விட்டு மற்றொரு வலிமையான சுவர் கட்டப்பட்டுள்ளது. அவைகளின் மீதுதான் 14 அடுக்குகளைக் கொண்ட இந்த மாபெரும் விமானம் கட்டப்பட்டுள்ளது.
சதுர வடிவில், ஒன்றைவிட விட்டத்தில் குறைவான அளவில் கற்களை அடுக்கி எழுப்பப்பட்டுள்ள இந்த 14
webdunia photo
WD
அடுக்குகளின் நடுப்பகுதி வெற்றிடமாகவே உள்ளதுதான் இந்தக் கட்டடக் கலையின் மற்றொரு அதிசயம். 14வது அடுக்கின் மீது 88 டன் எடையுடைய - 12 அடி உயர கும்பக் கலசத்தைத் தாங்கியுள்ள - மேல் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தனது எடையின் வலிமையால் அதன் கீழுள்ள மொத்த கட்டமைப்பையும் உறுதி குலையாமல் அழுத்தி நிற்கச் செய்கிறது.
இதுதான் அந்நாளைய தமிழர் அறிந்திருந்த கட்டடக் கலையின் சிறப்பாகும்.
ஆகாச வடிவத்தைப் பறைசாற்றும் வடிவம்!
இத்திருக்கோயிலில் அமைந்துள்ள விமானத்தின் நடுப்பகுதி வெற்றிடமாக விடப்பட்டுள்ளது வெறும் கட்டடக் கலை நுணுக்கம் மட்டுமேயன்று, அது ஒரு ஆன்மீக பேருண்மையை பறைசாற்றும் வகையிலும் நின்றுகொண்டிருக்கிறது.
webdunia photo
WD
இக்கோயிலின் கருவறையில் நாம் காணும் இறைவன் - சிவபெருமான் அரூபனாய் (உருவமற்றவனாய்) லிங்க வடிவமேற்று காட்சியளிக்கின்றான். அவனை தான் நாம் வணங்குகின்றோம். ஆனால் சிவபெருமான் தனது உண்மை வடிவில், இப்பிரபஞ்சத்தில் தான் படைத்த அனைத்தையும் தன்னுள் தாங்கி, நீக்கமற எங்கும் நிறைந்துள்ள ஆகாசமாய் விளங்குகின்றான் என்பதைப் புலப்படுத்தவே, லிங்கத்தின் மேற்பகுதி வெற்றிடமாய் விடப்பட்டுள்ளதென கூறப்படுகிறது.
இந்த ஆன்மீக உண்மையைதான் சிதம்பர ரகசியம் என்று தில்லை நடராஜர் ஆலயத்தில் காட்டப்படுகிறதென கூறப்படுகிறது.
மகா மேரு மலை!
இத்திருக்கோயிலின் விமானம், சிவபெருமான் உமையாளுடன் வதியும் மகா மேரு மலையின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டதென ஆன்மீக - கட்டடக் கலை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இக்கோயிலின் ஒவ்வொரு கல்லிலும், தூணிலும் சிற்பங்கள். கண்ணிற்கும், கருத்திற்கும் விருந்தளிக்கும் அபூர்வ சிற்பங்களாகும். அதில் ஒன்று கற்பனையை சூட்சமமாக வைத்து செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கோயில் கருவறைக்குள் நுழையும்போது அதன் இரு புறங்களிலும் காவல் காக்கும் துவாரபாலகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது எல்லா கோயில்களிலும் நாம் காணக் கூடியதுதான்.
webdunia photo
WD
இக்கோயிலுள்ள துவாரபாலகர்களில் ஒருவர் பிடித்திருக்கும் கதை எனும் ஆயுதத்தின் பிடியில் சுற்றியிருக்கும் ஒரு பாம்பு, யானை ஒன்றை விழுங்குவது போன்று செதுக்கப்பட்டுள்ளது. யானையை ஒரு பாம்பு விழுங்குவதா என்று கேட்பதற்கு முன், அதில் சூட்சமமாக விரிக்கப்பட்டுள்ள கற்பனையைப் அறிய வேண்டும்.
அந்த யானை நாம் பார்ப்பதற்கு ஒரு எலியைப் போல் உள்ளது. அந்த யானையை, அதன் முழு அளவிற்கு (வடிவத்திற்கு) உங்கள் மனதில் விரியுங்கள். அவ்வளவு பெரிய யானையை விழுங்கிக் கொண்டிருக்கும் பாம்பின் வடிவத்தை பிறகு கற்பனை செய்யுங்கள். அதன்பிறகு அது சுற்றியிருக்கும் கதாயுதத்தின் அளவை உங்கள் கற்பனையில் பெரிதாக்குங்கள். பிறகு, அதனை கையில் பிடித்திருக்கும் துவார பாலகரின் உருவத்தை அதற்கேற்ற அளவிற்கு பெரிதாக்குங்கள். அதே அளவிற்கு இக்கோயிலின் விமானத்தை உங்கள் கற்பனையில் விரித்தீர்களானால் அது நெடுதுயர்ந்த ஒரு மலையைப் போல இருக்குமல்லவா. அதுவே மகா மேரு மலை.
webdunia photo
WD
இதனைத் தன் கற்பனையில் விரித்து, அதை தத்ரூபமாக இந்த சிற்பத்தில் கூறியுள்ளார் இக்கோயிலை கட்டிய பேரரசர் இராஜராஜன். எனவே அவரின் இந்தக் கட்டுமானத்தின் பொருள், தான் வணங்கும் சிவபெருமான், உமையவள் பெரிய நாயகி எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ள தஞ்சை பெரியகோயிலே அவர் வதியும் மகா மேரு மலையென்பதே.
இப்படிக் கலையையும், ஆன்மீகத்தையும் இணைத்து இழைத்து கட்டப்பட்ட மாபெரும் திருக்கோயிலே தஞ்சை பெரிய கோயிலாகும்.
பிற்காலத்தில் ஏற்பட்ட படையெடுப்புகள், காலத்தின் சீற்றங்கள் அனைத்தையும் தாண்டி நிற்கும் இத்திருக்கோயிலில் விஜய நகரப் பேரரசின் காலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மாபெரும் நந்தி உள்ளது. 19 ½ அடி நீளமும், 12 அடி உயரமும், 8 ¼ அடி அகலமும் கொண்ட நந்தி தேவரின் சிலையும் கலையம்சத்தில் குறைவற்றதாகும்.
webdunia photo
FILE
விநாயகர், முருகன், இராஜராஜனுக்கு ஆலோசகராக இருந்த பதினென் சித்தர்களில் ஒருவரான கருவூரார் ஆகியோருக்கு இங்கு தனி சந்ந்திகள் உள்ளன.
நமது பாரம்பரியத்தின் அற்புத சின்னமாகத் திகழும் இத்திருக்கோயிலை நேரில் சென்று கண்டுகளியுங்கள். இக்கோயிலைக் கட்டிய சோழ்ப பேர்ரசர் இராஜராஜனின் சிலை கோயிலிற்கு வெளியே உள்ளது. அதையும் பாருங்கள்.