இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களை திவாடியா என்ற கிராமத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.
webdunia photo
WD
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்திற்கு அருகே உள்ளது இந்த திவாடியா கிராமம். அப்படி என்னதான் இந்த கிராமத்தின் சிறப்பு என்று நீங்கள் வியக்கக்கூடும். இந்த கிராமத்தில் வாழும் அனைவருமே ராமரின் பக்தர்கள் என்பது தான் இதில் உள்ள சிறப்பு. அதற்கு காரணமாக ஒரு சம்பவமும் உள்ளது.
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் வசித்த மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவின. கடும் பஞ்சமும் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்குள்ள சித் ஹனுமன் கோயிலில் அகண்ட ராமாயணம் பாராயணம் செய்யப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து திவாடியா கிராமத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்தனவாம்.
இது பற்றி அந்த கிராமத்தார் ஒருவர் கூறுகையில், பஞ்சம் ஏற்பட்டபோது கோயில் பூசாரி தர்மேந்த்ர வியாஸ், அகண்ட ராமாயணம் பாராயணம் செய்யத் துவங்கியதும், இந்த கிராமத்தில் வசித்து வந்தவர்களின் வாழ்விலும் வசந்தம் வீசத் துவங்கியது. ராமாயணம் துவங்கும் போது இங்கு நிலத்தடி நீர் மட்டம் 300 அடியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி 30 முதல் 40 அடிக்கு உயர்ந்துள்ளது.
webdunia photo
WD
பூசாரி தர்மேந்திர வியாஸ் மேலும் தெரிவிக்கையில், அகண்ட ராமாயணம் படிக்கும்போது எல்லோரும் ஒருமித்து, உணர்ந்து படிக்கின்றனர். முன்பை விட தற்போது கிராமத்தினர் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.
மற்றொரு கிராமத்து பிரமுகர் சொல்லும்போது, நவராத்திரி நாள் ஒன்றில் பாராயணம் நடந்து கொண்டிருந்தபோது கோயில் கோபுரத்தில் இடி விழுந்தது. ஆனாலும் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த பாராயணத்தைக் கேட்டு வந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர், தற்போது இயல்பான நிலைக்கு திரும்பியுள்ளார் என்றார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் இயல்பான நிலைக்கு மாறுவதும், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததற்கும் அகண்ட ராமாயணம் தான் காரணம் என்று நம்புகிறீர்களா?
நம்பினாலும், நம்பாவிட்டாலும் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை எங்களுக்கு எழுதுங்கள்.