நமது தமிழ்நாட்டில் அம்மனை வேண்டிக்கொண்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்துவது போன்று, மத்திய பிரதேச மாநிலத்தின் மால்வா பகுதியிலும் தீ மிதி விழா ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. வட நாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிடும் ஹோலி பண்டிகையின் மறுநாள், சூல் என்றழைக்கப்படும் இந்த விழா நடைபெறுகிறது.
நான்கு அடி நீளத்திற்கும், ஒரு அடி ஆழத்திற்கும் வெட்டப்பட்ட ஒரு குழியில் நிலக்கரி நிரப்பப்பட்டு, அதில் நெய் ஊற்றப்பட்டு நெருப்புக் களம் உருவாக்கப்படுகிறது. இந்த தீ மிதியில் பங்கேற்கும் பக்தர்கள் - எல்லோரும் பெண்கள் - தீயை மிதிப்பதற்கு முன்னர், அங்குள்ள ஆல மரத்தை சுற்றிவந்தும், கால் என்றழைக்கப்படும் தெய்வத்தையும் வணங்குகின்றனர்.
ஒருவர் பின் ஒருவராகச் சென்று தீ மிதிக்கின்றனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய தெய்வத்திற்கு தீ மிதித்தல் மூலம் நன்றி செலுத்துவதாக அம்மக்கள் கூறுகின்றனர்.
தீ மிதிப்பதால் தனக்கு காயமேதும் ஏற்படவில்லை என்று கூறும் சாந்தி பாய் என்ற பெண்மணி, கடந்த மூன்று ஆண்டுகளாக தீ மிதித்து வருவதாகக் கூறுகிறார்.
webdunia photo
WD
தனது சகோதரனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றும், அவனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் தான் பிரார்த்தனை செய்த்தாகவும், அது நிறைவேறி தனது சகோதரனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளதாகவும் கூறிய சோனா என்ற பெண், தான் முதல் முறையாக தீ மிதித்ததாகவும், மேலும் 4 ஆண்டுகளுக்கு தான் இங்கு வந்து தொடர்ந்து தீ மிதிக்கப்போவதாகவும் கூறினார்.
தீ மிதிக்கும் ஒருவர் தொடர்ந்து 5 ஆண்டுகளாவது மிதிக்க வேண்டும் என்பது இங்கு நியதியாக உள்ளது.
இந்த தீ மிதி விழாவிற்கு ஒரு புராண பின்னணியும் உள்ளது. தன்னை அவமதித்த தட்சண் மீது கோபம் கொண்டு பார்வதி தீயில் குதித்ததாகவும், சிவனின் சக்தியான பார்வதியை கெளரவப்படுத்தும் ஒரு விழாவாக இத்திருவிழா நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட சம்பிரதாயங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.