அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் தேச நெடுஞ்சாலை எண் 8-ல் நந்த் சேரி என்ற கிராமத்தில் உள்ள பாலாபீர் பாபாவின் தர்காவில் வேண்டிக் கொள்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது உரிய நேரத்தில் நடைபெறுகிறது என்று கூறுகின்றனர்!
நம்பினால் நம்புங்கள் தொடரில் பாலாபீர் பாபா என்பவரின் தர்காவிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.
இவரை நேரத்தின் கடவுள் என்று கூறுகின்றனர். அவரிடம் தங்களது வேண்டுதலைக் கூறி வணங்கிடும் பக்தர்கள், அது நிறைவேறியதும் செலுத்தும் காணிக்கை என்ன தெரியுமா? கைக்கடிகாரம் முதல், சுவர் கடிகாரம் வரை எல்லாமே கடிகாரங்கள்தான்.
இப்படிப்பட்ட ஒரு தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதும், நந்த் சேரி கிராமத்திற்குச் சென்ற நாங்கள், பாலாபீர் பாபாவின் தர்காவிற்குச் சென்றோம். அங்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் காணிக்கையாக்குவதை நேராகக் கண்டோம்.
எதற்காக? பாலாபீர் பாபாவிற்கு கடிகாரங்களை காணிக்கையாக்குகிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் ஒரே பதிலைத்தான் கூறினர். எங்களது வேண்டுதலை பாபா நிறைவேற்றினார் என்று.
இந்த தர்காவை பராமரித்து வருவது ஒரு இந்து குடும்பம்தான். தேச நெடுஞ்சாலையில் உள்ளதால் அவ்வழியாக லாரிகளை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள் அனைவரும் இந்த தர்காவிற்கு முன் நிறுத்தி பாலாபீர் பாபாவை வழிபடுகின்றனர். தங்களது வாகனம் விபத்தேதும் இன்றி செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுதலாம்.
webdunia photo
WD
இப்படி பக்தர்கள் அளிக்கும் கைக்கடிகாரங்களையும், சுவர் கடிகாரங்களையும் என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டதற்கு, தர்காவை பராமரித்து வரும் லதாபாய், அவற்றை பள்ளிகளுக்கும், திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கும் பரிசாக அளித்துவிடுவதாகக் கூறினார். அதனைப் பெறுவதன் மூலம் அவர்கள் பாலாபீர் பாபாவின் அருளைப் பெறுகின்றனர் என்று பதிலளித்தார்.
மேலும் சிறிது நேரம் அங்கிருந்த நாம், பல பக்தர்கள் தொடர்ந்து வந்து கடிகாரங்களை காணிக்கையாக்குவதைக் கண்டோம். பாலாபீர் பாபாவிடம் தாங்கள் வேண்டிக்கொள்வதை நிறைவேற்ற, அதுவும் குறித்த நேரத்தில் நிறைவேற்ற மக்கள் கடிகாரங்களை காணிக்கையாக்குவதை அவர்களுக்குள்ள நேரத்தின் மீதான பற்றுதலை காட்டுகிறது என்றாலும், இப்படிப்பட்ட நம்பிக்கையைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.
நாங்கள் குறித்த நேரத்திற்கு ரயில் நிலையம் சென்று எங்களுடைய ரயிலைப் பிடிப்பதற்கு அருள்புரிய வேண்டும் என்று பாலாபீர் பாபாவை வேண்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.