தீப்பந்த உரசல், நெருப்புக் குழியில் நடனம்!

தீப்பந்தத்தால் உரசிக் கொண்டும், தீக்குழியில் இறங்கி நடனமாடியும் எந்த தீக்காயமும் ஏற்படுவதில்லை. எங்கே? எப்படி? என்று கேட்கத் தோன்றுகிறதா?

webdunia photoWD
இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரானூர் என்ற கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்லப் போகிறோம். இங்கு பக்தியின் உச்சத்தில், ஒரு சிலர் நெருப்பை உரசிக் கொள்ளும் அளவிற்கு செல்கின்றனர். ஆனால் தீப்பந்தத்தால் அவர்களது உடலில் உரசினாலும் தீக்காயம் எதுவும் ஏற்படுவதில்லை. சுவாமி ஐயப்பனின் விளக்கு பூஜை நடக்கும் அந்த கிராமத்திற்குள் செல்வோம்.

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு கோயிலுக்குச் செல்வதற்கு முன்பாக ஐயப்ப பக்தர்கள் நடத்தும் பூஜைதான் ஐயப்பன் விளக்கு பூஜை. இந்த பூஜை கேரளாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. மேலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த விளக்குப் பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

ஒரு தனிப்பட்ட நபரோ, ஒரு குடும்பத்தினரோ, ஒரு அமைப்போ அல்லது ஒரு குழுவோ ஐயப்பன் விளக்கு பூஜையை நடத்தலாம். இந்த விளக்கு பூஜையின் போது அந்த இடத்தில் தென்னைமர ஓலை மற்றும் வாழைப்பட்டைகளைக் கொண்டு சபரிமலைக் கோயிலின் தோற்றத்தை செய்து வைத்திருப்பர். இது மிகவும் கைதேர்ந்த கலைஞர்களைக் கொண்டு செய்யப்படுகிறது.

webdunia photoWD
அங்கு மாலை நேரத் துவக்கத்திலேயே வாத்தியக் குழுவினர் இசைக்க ஆரம்பித்துவிடுவர். ஐயப்பனின் பக்திப் பாடல்களும் இசைக்கப்படும். இதனிடையே ஐயப்பனுக்கு பூஜைகளும் நடத்தப்படும். ஐயப்ப விளக்கு பூஜையின் நிறைவாக குருதி என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருதி நிகழ்ச்சியில் பூசாரி அல்லது குறி சொல்பவர் போன்று ஒருவர் வாழைப்பட்டைகளால் அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயிலைச் சுற்றி நடனமாடுகிறார். அந்த நடனத்தின் போது அவர் செய்யும் சில செயல்கள் பார்ப்பவர்களை அதிசயிக்க வைக்கிறது.

webdunia photoWD
நள்ளிரவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தனது கைகளில் வைத்திருக்கும் தீப்பந்தங்களால் அவர் தனது உடலை உரசிக் கொள்கிறார். மேலும் அங்கு இசைக்கப்படும் இசை வாத்தியத்திற்கு ஏற்ப தீப்பந்தங்களை உரசியபடி நடனமும் ஆடுகிறார். முதலில் மெதுவாகத் துவங்கும் இசை பின்னர் நேரம் செல்லச் செல்ல அதிர்கிறது. இசையின் ஓட்டத்திற்கு ஏற்ப பூசாரியின் நடனமும் வேகம் பிடிக்கிறது.

இந்த நிகழ்ச்சி சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது. ஆனாலும் அந்த பூசாரியின் உடலில் ஒரு சிறு தீக்காயமோ, தீப்புண்ணோ ஏற்படுவதில்லை. ஐயப்பனின் சக்தியால்தான் அந்த பூசாரியின் உடலில் தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை என்று ஐயப்ப பக்தர்கள் நம்புகின்றனர்.

இதுமட்டுமல்ல, அந்த கோயிலை ஒட்டி அமைக்கப்பட்ட நெருப்புக் குழியில் வெறுங்காலுடன் இறங்கி நடனமும் ஆடுகிறார். இதனை அவர்கள் கனல் ஆட்டம் என்று அழைக்கின்றனர். தீக்குழியில் பூசாரி மட்டுமல்லாமல் அவருடன் இருக்கும் உதவியாளர்களும் அந்த தீக்குழியில் இறங்குகின்றனர்.

webdunia photoWD
தீயில் இறங்கினாலும், தீப்பந்தத்தை உரசிக் கொண்டாலும் தீக்காயம் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்களது தொடர் பயிற்சியும் நுணுக்கமுமே காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால், தீயில் இறங்கும்போதும், தீயை உடலில் உரசிக் கொள்ளும்போதும் ஐயப்பனின் மந்திரங்களை உச்சரிப்பதே அவர்களது உடலில் காயம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணம் என்று சிலர் கருதுகின்றனர்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.