சிவபெருமானின் சிறைச்சாலை!

Webdunia

புதன், 16 ஜனவரி 2008 (10:51 IST)
webdunia photoWD
இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களை ஒரு விநோதமான இடத்திற்கு அழைத்துச் சொல்லப்போகிறோம். அது ஒரு சிறைச்சாலை. அங்குள்ள கைதிகளையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இதில் விநோதம் என்னவென்றால் இது சிவபெருமானின் சிறைச்சாலையாகும்.

இங்கு நூற்றுக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் எல்லை மாவட்டமான நீமாக்கில் இந்த சிறைச்சாலை உள்ளது.

இப்படி ஒன்றை கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கு ஏராளமான கைதிகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருந்தனர். பல தடுப்புகளுக்கு இடையே ஏராளமான கைதிகள் இருந்தனர்.

அதில் இருந்த ஒரு கைதி எங்களிடம் பேசினார். தான் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து விடுபட இங்கு வந்துள்ளதாகக் கூறினார். நோய் தீர்ந்த உடன் சிவபெருமானின் முன் அனுமதியுடன் தான் இங்கிருந்து சென்று விடுவேன் என்றும் அவர் கூறினார்.

webdunia photoWD
இப்படிப்பட்டவர்கள் தான் இங்கு கைதிகளாக உள்ளனர். எல்லா கைதிகளுமே சிவபக்தியில் மூழ்கி திளைத்தனர். தங்களுடைய உடலின் மீது சேற்றை பூசிக் கொண்டு சிவ நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

இங்குள்ள சிவலிங்கத்தை திரிசாவமஹாதேவ் என்று கூறுகின்றனர். இது சுயம்பு லிங்கமாகவும் கருதப்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது இந்த சிறைச்சாலை என்றழைக்கப்படும் கோயில். இங்குள்ள குளத்தில் இருந்துதான் கங்கை பிறந்ததாகவும் ஒரு நம்பிக்கை இங்குள்ள மக்களிடையே நிலவுகிறது.

webdunia photoWD
இந்த குளத்தின் சேறு எந்த நோயையும் குணப்படுத்திவிடக் கூடிய சக்தி பெற்றது என்று கூறினார். இந்த சேற்றை எடுத்து பூசிக் கொண்டுதான் கைதிகளாக உள்ள நோயாளிகள் சிவநடனம் புரிகின்றனர்.

இங்குள்ள சிறைக்கு வர நினைக்கும் நோயாளிகள் முதலில் கோயில் நிர்வாகத்திடம் கடிதம் எழுதி ஒப்புதல் பெற வேண்டும்.

அவருக்கு அனுமதி வழங்கப்பட்டால் கைதிக்கான அடையாள அட்டை வழங்கப்படும். அங்கு வந்து தங்கும் நோயாளிக்கு ஆகும் சாப்பாட்டு செலவை கோயில் நிர்வாகமே எடுத்துக் கொள்கிறது. சிறைக் கைதிகள் (நோயாளிகள்) அனைவரும் ஒவ்வொரு நாளும் அந்தக் குளத்தில் குளிக்க வேண்டும். அதன் பிறகு அங்குள்ள கல் ஒன்றை தலையில் தூக்கிக் கொண்டு ஐந்து முறை கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும்.

கோயிலின் அனைத்து இடங்களும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டியது கைதிகளின் பொறுப்பு. இப்படி இங்கு தங்களை பிடித்துள்ள நோயை குணப்படுத்திக் கொள்ள சில நாள் கணக்கிலும் மேலும் சிலர் மாதக் கணக்கிலும் சிலர் ஆண்டுக் கணக்கிலும் இருக்கின்றனர்.

webdunia photoWD
அவர்களது நோய் குணமானதும் அதனை அவர்களின் கனவில் வந்து சிவபெருமான் கூறுவார் என்று கூறுகின்றனர். அந்த கனவு கோயில் நிர்வாகிக்கும் வர வேண்டும். அப்போதுதான் அவர் கைதியை விடுதலை செய்வார்.

இந்த கோயிலைப் பற்றி கேட்டதும் பார்த்ததும் எங்களுக்கு மிக விநோதமாக இருந்தது. நம்புவதற்கும் கடினமாக இருந்தது. ஆனால் இங்குள்ள கைதிகளின் உறவினர்கள் தங்களுக்குத் தெரிந்த பலர் குணமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

நீங்கள் என்ன கூறுகிறீர்கள். எங்களுக்கு கூறுங்கள்!