குழந்தை பேற்றைத் தரும் கால்ராத்ரி மா!

திங்கள், 24 டிசம்பர் 2007 (19:51 IST)
குழந்தை பாக்கியம் என்பது கடவுள் அளிக்கும் பெரு வரமாகும். ஒவ்வொரு தம்பதிகளுக்கும், அவர்களது குழந்தையின் முதல் அழுகைக் குரலைக் கேட்ட நொடிப்பொழுதுதான் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நேரமாக இருக்கும். குழந்தை பாக்கியம் என்பதுதான் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய சந்தோஷம் என்பார்கள். இதுபோல் குழந்தை இல்லாதவர்கள் அடையும் துயரத்தை அளவிட்டு சொல்ல இயலாது.

webdunia photoWD
குழந்தைக்காக ஒருவன் எதையுமே செய்யத் தயாராக இருப்பான். ஒரபக்கம் கடவுளின் நீதிமன்றத்தில் அவரது அருளுக்காக தலைதாழ்த்திக் காத்திருப்பதும், மறுபக்கத்தில் குழந்தைப்பேறுக்காக மருத்துவர்களின் உதவியை நாடுவதிலும், சில சமயங்களில் போலி வழிகளை கண்மூடித்தனமாக நம்பி ஏமாறுவதும் உண்டு. இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் ப‌க்த‌ர்க‌ள் குழந்தைப் பேறுக்காக ‌பிரா‌ர்‌த்‌தி‌க்கு‌ம் இந்தூரில் உள்ள மா அம்பவாலி என்ற கோயிலை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த கோயிலின் மூல தெய்வம் மா கால்ராத்ரியாகும். இந்தக் கோயிலில் உள்ள மா கால்ராத்ரியை வணங்கி இவ்வாறு வேண்டுதலை நிறைவேற்றுபவர்கள் அனைவருக்கும் தாயின் அருளாசி கிடைக்கும் என்று நம்புகின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்தக் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

இந்த கோயிலைப் பற்றி அறிந்ததுமே அங்கு புறப்பட்டோம். இரவு 10 மணி இருக்கும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோயிலில் குழுமியிருந்தனர். ஒரு சிலர் குழந்தை பாக்கியம் வேண்டி கடவுளை பிரார்த்திக்கவும், ஒரு சிலர் குழந்தை பாக்கியம் கிட்டியதற்கு மா கால்ராத்ரிக்கு நன்றி கூறி காணிக்கை செலுத்தவும் அங்கு வந்திருந்தனர்.

webdunia photoWD
அங்கு வந்திருந்த பக்தர்களில் ஒருவரான சஞ்சய் அம்பாரியா நம்மிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லை. எனது நண்பர் ஒருவர் இந்த கோயில் பற்றி கூறினார். நானும் இங்கு வந்து தாயை வழிபட்டப் பிறகு எனக்கு குழந்தை பாக்கியம் கிட்டிற்று என்றார்.

இந்த பிரார்த்தனை கொஞ்சம் வித்யாசமானது. தங்களது ஆசைகளை தாயிடம் கூறும்போது 3 தேங்காய்களை காணிக்கையாக அளிக்கின்றனர். அப்போது அந்த கோயிலின் குருக்கள், பக்தரின் கழுத்தில் கயிறு ஒன்றை கட்டி விடுகிறார். அது 5 வாரங்கள் கழுத்தில் இருக்க வேண்டும். எப்போது பக்தரின் வேண்டுகோள் நிறைவேறுகிறதோ அப்போது அங்குள்ள ஒரு மரத்‌தி‌ல் 5 தேங்காய்களை அ‌ந்த ப‌க்த‌ர் க‌ட்டி‌விட வேண்டும்.

webdunia photoWD
அதன்படியே தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி கூறி தேங்காய்களை கட்டுவதற்காகவே சஞ்சய் அம்பாரியா வந்துள்ளார்.

சஞ்சய் அம்பாரியா போன்றே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மா கால்ராத்ரிக்கு நன்றி கூறி மரத்தில் தேங்காய்களைக் கட்டியுள்ளனர்.

இந்த கோயிலின் பூசாரியான பூரன் சிங் பார்மர் கூறுகையில், மா கால்ராத்ரியின் கோயிலில் இரவில்தான் பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த கோயிலில் நம்பிக்கையுடன் வந்து எதை வேண்டினாலும் அவர்களுக்கு அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதற்காக சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். அன்று இரவும் சிறப்பு பூஜைகள் செய்வதில் பூரன் சிங் ஈடுபட்டிருந்தார். அவர் பூஜை செய்து மெளலி என்ற கயிறையும் பக்தர்களுக்கு வழங்குகிறார். இந்த கயிறை பக்தர்கள் ஐந்து வாரம் வரை கழுத்தில் கட்டியிருக்க வேண்டும் என்று அவ‌ர் கூறினார்.

சில பக்தர்கள் சிறப்பு ஆரத்தியின் போது அவர்களை மறந்த நிலைக்கு செல்கின்றனர். இப்போது அந்த பூசாரி பெண் பக்தர்களுக்கு தேங்காயை பூஜித்து அளிக்கிறார். எல்லோரும் அந்த தேங்காயை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வாங்கிக் கொள்கின்றனர்.

அப்படி தேங்காய் வாங்க வந்துள்ள பக்தை விம்லா செங்கர், இங்கு பூஜித்து தேங்காய் வாங்கிய பிறகு நிச்சயம் தனக்கு குழந்தை பிறக்கும் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

webdunia photoWD
இதில் இன்னுமொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வரும் தம்பதிகள் தங்களுக்கு பெண் குழந்தை வேண்டுமென்று வேண்டிக் கொள்கின்றனர். ஏனெனில் அந்த பெண் குழந்தையை துர்கா தேவியின் உருவமாக எண்ணலாம் என்கின்றனர். பெண் குழந்தையின் பிறப்பைக் கொண்டாடுகின்றனர்.

இங்கு வந்து பிரார்த்தித்தால் அவர்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று அவர்கள் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?