அரசர்கள் இரவு தங்க அஞ்சிய நகரை அறிவீர்களா?

Webdunia

திங்கள், 10 டிசம்பர் 2007 (19:32 IST)
webdunia photoWD
மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகரில் அரசர்களோ அல்லது இந்நாளைய அரசியல் தலைவர்களோ இரவு தங்குவதில்லை என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த நகரம் சிவபெருமானின் ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான புனிதத் தலமாகும். மகா காலேஸ்வரரின் நகரம் என்றழைக்கப்படும் உஜ்ஜைன்தான் அந்த நகரம். இங்கு எந்த அரசராவது தங்கியிருந்தால் அவர் தனது ராஜ்ஜியத்தை அல்லது ஆளுமையை இழப்பார் என்று வரலாற்றுப்பூர்வமான நம்பிக்கை நிலவி வருகிறது!

எப்படி இந்த நம்பிக்கை ஏற்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாது. ஆனால், இன்று கூட அரசியல் தலைவர்களோ, முதலமைச்சர்களோ அல்லது பிரதமரோ உஜ்ஜைன் நகருக்கு வந்தாலும், அருமையான அந்நகரில் இரவு தங்குவதில்லை.

சுதந்திரத்திற்கு முன்பு உஜ்ஜைன் நகரம் குவாலியரை ஆண்டு வந்த சிந்தியா அரசாட்சியின் கீழ் இருந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்த யாராவது உஜ்ஜைனுக்கு வந்து இரவு தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்கள் உஜ்ஜைன் நகருக்கு வெளியில்தான் தங்கியுள்ளார். சிந்தியா அரச குடும்பம் மட்டுமின்றி, மற்ற பகுதி அரசர்களும் உஜ்ஜைனுக்கு வந்தால் இரவு அந்நகரில் தங்குவதில்லை. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, அரசாட்சியில் உயர்ந்த பதவியை வகித்தவர்கள் கூட உஜ்ஜைனில் இரவு தங்குவதில்லை.

webdunia photoWD
இதனால், தாங்கள் உஜ்ஜைன் வரும்போது தங்குவதற்காக அந்நகருக்கு வெளியே ஓர் அரண்மனையை சிந்தியா அரச குடும்பத்தினர் கட்டினர். அங்கிருந்து நகரின் நிர்வாகத்தை கவனித்தனர். அங்கு தங்கி நிர்வாகத்தை கவனிக்கும் அரசு அலுவலர்கள் கூட பகலில் உஜ்ஜைனுக்கு வந்துவிட்டு, இரவு தங்குவதற்கு காலியாடா அரண்டனை என்றழைக்கப்பட்ட அந்த மாளிகைக்கு திரும்பியதாக வாழ்வழி வரலாறு கூறுகிறது.

காலியாடா அரண்மனையில் இல்லாத வசதிகளே இல்லை என்று கூறலாம். அரண்மனையின் வெளிப்புறத்திலேயே அழகிய நீர்த் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. சிந்தியா குடும்பத்தினர் சூரியனை வழிபடுபவர்கள் ஆதலால், அவர்கள் ஒரு அழகிய சூரிய கோயிலை அரண்மனைக்குள்ளேயே கட்டியுள்ளனர். சுதந்திரத்திற்குப் பிறகு சிந்தியாவின் ராஜ்ஜியம் கலைக்கப்பட்டது. ஆயினும், உஜ்ஜைனில் இரவு தங்காத அந்த வழக்கம் மட்டும் மாறவேயில்லை.

webdunia photoWD
இன்றைக்கும் அமைச்சர்களும், அரசு நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளும் அங்கு இரவில் தங்க அஞ்சுகின்றனர். இதனால் காலியாடா அரண்மனையைக் கட்டியதைப் போல, மத்தியப் பிரதேச அரசு, அமைச்சர்களும், பெரும் அரசு அதிகாரிகளும் தங்குவதற்கு உஜ்ஜைன் நகருக்கு வெளியே விருந்தினர் மாளிகையை கட்டியுள்ளனர்.

எவ்வளவு பெரிய வணிகராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் உஜ்ஜைனின் எல்லையைத் தொடுபவர் முதலில் உஜ்ஜைன் அரசரான மகா காலேஸ்வரருக்கு தலை வணங்குவார்கள். மகா காலேஸ்வரருக்கு செய்யப்படும் விபூதி ஆராதணையில் பங்கேற்றப் பின்னர்தான் உஜ்ஜைனில் தங்கள் பணியைத் துவக்குவார்கள்.

மகா காலேஸ்வரரே உஜ்ஜைன் நகருக்கு எந்த அச்சுறுத்தலும் வராமல் காப்பாற்றி வருவதாக அக்கோயிலின் பூசாரி வெப்துனியா செய்தியாளரிடம் கூறியுள்ளார். மகா காலேஸ்வரரே உஜ்ஜைனின் அரசர். ஒவ்வொரு ஆண்டும் ஷிராவன மாதத்தில் உஜ்ஜைன் நகருக்கு திருவீதி உலா வந்து தனது மக்களின் நிலையை மகா காலேஸ்வரர் அறிந்துகொள்வதாகக் கூறுகின்றனர். எனவே அவர் தனது மக்களை ஆட்சி புரிய எந்த அரசரையோ, நிர்வாகியையோ அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

webdunia photoWD
இங்கு நடந்த சிம்மஸ்தா விழாவில் கலந்துகொண்ட உமாபாரதி, உஜ்ஜைனில் உள்ள தனது ஆன்மீகக் குருவின் கூடாரத்தில் தங்கினார். விளைவு அவர் முதலமைச்சர் பதவியை இழந்தார். இதனை அறிவாளிகள் ஏற்கவில்லை. உமாபாரதிக்கு பதவி போனதும், அவர் இங்கு தங்கியதும் தற்செயலாக நிகழ்ந்தவையே என்று கூறுகின்றனர். மகா காலேஸ்வரருக்கு மதிப்பளிக்கும் விதமாகவே இங்கு வந்த அரசர்களும், தலைவர்களும் நகருக்கு வெளியே தங்கியதாகக் கூறிய ராஜேஷ் பாட்டியா என்ற பக்தர், தனது பக்தர்களை இறைவனான மகா காலேஸ்வரர் எதற்காக தண்டிக்கப் போகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

நீங்கள் கூறுங்கள், நம்பிக்கையா? அல்லது மூட நம்பிக்கையா?